9.எச்சவியல்

எச்சச் சொற்களின் வகை

உம்மை யெச்சம்

436உம்மை எச்சம் இருவீற் றானுந்
தன்வினை ஒன்றிய முடிபா கும்மே.
 

எஞ்சுபொருட்கிளவியும் அவ்வெஞ்சுபொருட்கிளவியான் முடிவதுமாகிய உம்மையெச்ச வேறுபாடிரண்டன் கண்ணும், தன்வினை உம்மையொடு தொடர்ந்த சொற்குப் பொருந்திய முடிபாம்; எ - று.

என்றது, `எஞ்சுபொருட் கிளவி செஞ்சொ லாயின்'(சொல் - 284) என்றதனான் உம்மையுடைத்தாயும் உம்மையின்றியும் வரும் எஞ்சு பொருட்கிளவி உம்மையெச்சத்திற்கு முடிபாத லெய்திற்று. என்னை? எல்லாவெச்சத்திற்கும் எஞ்சு பொருட்கிளவியே முடிபாகலின். இனி உம்மையொடு தொடர்ந்த சொல்லிரண்டற்கும் வினையொன்றேயாகல் வேண்டுமென எய்தாத தெய்துவித்தவாறு.

ஒன்றற்காயதே ஏனையதற்கு மாகலிற் றன்வினையென்றார்.

எ - டு : சாத்தனும் வந்தான், கொற்றனும் வந்தான் என இரண்டும் ஒருவினை கொண்டவாறு கண்டுகொள்க. சாத்தானும் வந்தான், கொற்றனு முண்டான் என வினை வேறுபட்ட வழி உம்மை யெச்சமும் எஞ்சுபொருட் கிளவியும் இயையாமை கண்டுகொள்க. அஃதேல்,

`பைம்புதல் வேங்கையு மொள்ளிணர் விரிந்தன
நெடுவெண் டிங்களு மூர்கொண் டன்றே' (அகம் - 2)
என வினை வேறுபட்டுழியுந் தம்மு ளியைந்தனவா லெனின்:- இணர் விரிதலும் ஊர் கோடலும் இரண்டும் மணஞ்செய் காலம் இது வென்றுணர்த்தலாகிய ஒருபொருள் குறித்து நின்றமையான், அவை ஒரு வினைப்பாற்படுமென்பது. பிறவும் இவ்வாறு வருவனவறிந்து ஒரு வினைப்பாற்படுக்க.

எஞ்சு பொருட்கிளவி செஞ்சொலாயவழித் தன்வினை கோடல் ஈண்டடங்காமையான், அது தன்னினமுடித்தலென்பதனாற் பெறப்படும்.

உம்மையெச்ச மிருவீற்றானு மென்றதனான், உம்மை யெச்சத்திற்கு முடிபாகிய எஞ்சுபொருட்கிளவி உம்மையொடுவரின் எச்சமாமென்பதாம். அஃதெச்சமாங்கால், முன்னின்றது, எஞ்சுபொருட் கிளவியாமென்பது.

எதிர்மறையும்மை எதிர்மறை யெச்சமா யடங்குதலின், ஈண்டும்மை யெச்சமென்றது எச்சவும்மையேயாம்.

(40)