உம்மை யெச்சத்தின்முன் எஞ்சுபொருட்கிளவி உம்மையில் சொல்லாய் வருங்கால் நிகழ்காலத்தோடு எதிர்காலமும் இறந்த காலத்தோடு எதிர்காலமும் மயங்குதல் வரையார்; எ - று. முறைநிலையான வென்றதனான், கூறிய முறையானல்லது எதிர்காலம் முன்னிற்ப ஏனைக்காலம் பின் வந்து மயங்குதலில்லை யென்பதாம். எ - டு : கூழுண்ணாநின்றான் சோறுமுண்பன் எனவும், கூழுண்டான் சோறுமுண்பன் எனவும் அவை கூறிய முறையான் மயங்கியவாறு கண்டுகொள்க. இவற்றோடு இது மயங்குதல் வரையா ரெனவே, இறந்த காலத்தோடு நிகழ்காலமும் நிகழ்காலத்தோடு இறந்தகாலமும் வந்து மயங்குதல் வரையப்படு மென்றவாறாயிற்று. தன்மேற் செஞ்சொல் வரூஉங்காலை யென்றதனான், உம்மையடுத்த சொல் வருங்கால், வேறுபாடின்றி இரண்டு சொல்லும் ஒருகாலத் தான் வருமென்பதாம். தன்வினை, காலம்வேறுபடுதலும் படாமையும் உடைமையான், இன்னுழி இன்னவாற்றா னல்லது காலம் வேறுபடாதென வரையறுத்தவாறு. (41) |