1.கிளவியாக்கம்

எண் ஒருமைக்குரிய சொற்கள்

44ஒருமை யெண்ணின் பொதுப்பிரி பாற்சொல்
ஒருமைக் கல்லது எண்ணுமுறை நில்லாது.
 

ஒருமையெண்ணினை உணர்த்தும் பொதுப்பிரிபாற் சொல்லாகிய ஒருவன் ஒருத்தி என்னுஞ் சொற்கள்,ஒருமைக் கண்ணல்லது,இருமை முதலாகிய எண்ணுமுறைக் கண் நில்லா; எ-று. எனவே, பொதுப்பிரியாப் பாற்சொல்லாகிய ஒருவர் என்னுஞ்சொல் இருவர் மூவரென எண்ணு முறைக்கண்ணும் நிற்குமென்பதாம்.

பொதுப்பிரி பாற்சொல் என்றாரேனும்,ஒருவன், ஒருத்தி என்பனவற்றது பாலுணர்த்துமீறே கொள்ளப்படும். என்னை? எண்ணுமுறை நில்லா என்று விலக்கப்படுவன அவையே யாகலினென்பது.

மகன் மகள் என்னுந்தொடக்கத்துப் பெயர்ப்பொதுப்பிரிபாற் சொல்லின் நீக்குதற்கு ஒருமை யெண்ணின் என்றும், ஒருவர் ஒன்று என்பனவற்றின் நீக்குதற்குப் பொதுப்பிரி பாற்சொல் என்றுங் கூறினார்.

ஒருவரென்னும் ஆண்மைப்பெண்மை பொதுவிற் பிரிதலின் பொதுப்பிரி பாற்சொல் என்றார்.

பொதுப்பிரி பாற்சொல் என்னும் ஒற்றுமையான் நில்லாது என ஒருமையாற் கூறினார்.

ஒருவன் ஒருத்தி என ஒருமைக்கண் நிற்றலும், இருவன் மூவன் இருத்தி மூத்தி என எண்ணு முறைமைக்கண் நில்லாமையும் கண்டு கொள்க.

ஒன்றென முடித்தல் என்பதனான் ஒருவேன் ஒருவை என்னும் தன்மை முன்னிலையீறும் எண்ணுமுறை நில்லாமை கொள்க.

இது பால்வழுக் காத்தவாறு.

(44)