9.எச்சவியல்

எச்சச் சொற்களின் வகை

குறிப்பெச்சமும் இசை எச்சமும்

440அவைதாம்
தத்தங் குறிப்பின் எச்சஞ் செப்பும்.
 

அவ்வெச்சமூன்றும் சொல்வார் குறிப்பான் எஞ்சி நின்ற பொருளையுணர்த்தும்; எ - று.

எ - டு : `பசப்பித்துச் சென்றா ருடையையோ வன்ன
நிறத்தையோ பீரமலர்'
`இளைதாக முணமரங் கொல்க களையுநர்
கைகொல்லுங் காழ்த்த விடத்து' (குறள் 879)
என்புழி முறையானே பசப்பித்துச் சென்றாரை யாமுடையேம் எனவும், தீயாரைக் காலத்தாற் களைக எனவும் வந்த தொடர்மொழி எச்சமாய் நின்ற குறிப்புப்பொருளை வெளிப்படுத்தலாற் குறிப்பெச்சமாயின.
`அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு' (குறள்-1)

`அளித்தஞ்ச லென்றவர் நீப்பிற் றெளித்தசொற்
றேறியார்க் குண்டோ தவறு' (குறள்-1154)

என்றவழி முறையானே அதுபோல எனவும், நீத்தார்க்கே தவறு எனவும் வருவன எஞ்சிய இசைப்பொருளுணர்த்தலான் இசையெச்ச மாயின. சொல் லெச்சத்திற்கு உதாரணம் முன்னர்க்காட்டுதும். `சொல்லளம் வல்ல தெஞ்சுத லின்றே' (சொல், 441) என்பதனான் அஃதொரு சொல்லாதல் பெறப் படுதலின் இது தொடர்ச் சொல்லாமென்பது சொல்லென்னுஞ் சொல் எஞ்சுவது சொல்லெச்சமென்பார் இவ்விரு வகையும் இசையெச்சமென அடக்குப.

பசப்பித்துச் சென்றாரை யாமுடையேம் என்னுந் தொடக்கத்தன குறிப்பிற்றோன்றலா யடங்குதலின், விண்ணென விசைத்தது என்பது குறிப்பெச்சமென்றும், அதுபோல என்னுந் தொடக்கத்தன விகாரவகையாற்றொக்கு நின்றமையான், ஒல்லென வொலித்தது என்பது இசையெச்ச மென்றும். இவை தத்தஞ் சொல்லான் முடிதலல்லது பிற சொல்லான் முடியாமையின் இவற்றை மேல்வந்து முடிக்கும் எஞ்சு பொருட்கிளவியில வென்றாரென்றும், உரைத்தாரால் உரையாசிரியரெனின்:- அற்றன்று; `தெரிபுவேறு நிலையலுங் குறிப்பிற் றோன்றலும்' (சொல்-157) எனச் சொற்பொருட் பாகுபாடுணர்த்தினார். குறிப்பிற் றோன்றும் பொருளை வெளிப்படுத்தும் எச்சமாதலுடைமையான் எச்சமென்றார்; அதனான் ஆண்டடங்காது. இனி விசைத்தது ஒலித்தது என்பன தஞ்சொல்லெனப்படா; படினும் விண்ணென வீங்கிற்று, துண்ணெனத் துளங்கினான் எனவும், ஒல்லென வீழ்ந்தது எனவும் பிற சொல்லானும் முடிதலின் எஞ்சுபொருட் கிளவியில வென்றல் பொருந்தாதாம் என்னை? தஞ்சொ லல்லாதன எஞ்சுபொருட் கிளவியா மாகலின்.

இனி அதுபோல வென்பது தொகுக்கும்வழித் தொகுத்த லென்பதனாற் றொக்கதாயின் அதனைச் சுட்டிக் கூறாவுவமையென அணியியலுள் ஆசிரியர் ஓருவமை வேறுபாடாகக் கூறல் பொருந்தாது. தொகுக்கும் வழித் தொகுத்தல் ஒரு மொழிக்கண்ண தாகலிற் பலசொற்றொகு மென்றலும் பொருத்தமின்று. அதனான் அவர்க்கது கருத்தன்று. விண்ணென விசைத்தது; ஒல்லென வொலித்தது என்னுந் தொடக்கத்தனவற்றை எனவெனெச்சமென அடக்கிக் குறிப்பெச்சத்திற்கும் இசையெச்சத்திற்கும் வேறுதாரணங்காட்டல் கருத்தென்க. அல்லதூஉம், எனவெனெச்சமென அடக்காது இசையுங் குறிப்பும்பற்றி வருவனவற்றை வேறோதின், வெள்ளென வெளுத்தது எனப் பண்பு பற்றி வருவதனையும் வேறோதல்வேண்டும்; அதனை வேறோதாமை யானும் என வெனெச்சமென அடக்குதலே கருத்தாகக் கொள்க. குறிப்புப் பொருளைப் `பசப்பித்துச் சென்றாருடையையோ, இளைதாக முண்மரங் கொல்க' என்பன முதலாகிய தொடர் மொழியே உணர்த்தலான் எஞ்சு பொருளெனப்படா வாயினும், அப்பொருள் பிறசொல்லானல்லது வெளிப்படாமையின், அச்சொல் லெச்சமாயிற்று. குறிப்புப் பொருளேயன்றி எஞ்சு பொருளுஞ் சொல்லுவான் குறிப்பொடு படுத்துணர்ந்து தமக்கேற்ற சொல்லாலுணர்த்தப்படுதலின். குறிப்பானெச்சஞ் செப்பல் மூன்றற்கு மொத்தவாறறிக.

(44)