9.எச்சவியல்

எச்சச் சொற்களின் வகை

சொல்லெச்சம்

441சொல்லென் எச்சம் முன்னும் பின்னும்
சொல்லள வல்லது எஞ்சுதல் இன்றே.
 

சொல்லெச்சம், ஒருசொற்கு முன்னும் பின்னுஞ் சொன்மாத்திரம் எஞ்சுவதல்லது, தொடரா யெஞ்சுதலின்று: எ - று.

`உயர்திணையென்மனார்' (சொல்-1) என்புழி ஆசிரிய ரென்னுஞ் சொல் முன்னும்,` மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே,' (குறுந்-71) என்புழி எமக்கென்னுஞ்சொல் பின்னும், எஞ்சி நின்றவாறு கண்டுகொள்க.

ஒருசாரார் இவற்றை இசையெச்சமென்று, சொல்லள வல்லதெஞ்சுதலின்றே என்பதற்குச் சொல்லென்னுஞ் சொல் லளவல்லது பிறிது சொல்லெஞ்சுத லின்றென்று பொருளுரைத்து.பசித்தேன் பழஞ்சோறு தாவென்று நின்றாள் என்புழித் தாவெனச்சொல்லி யெனச், சொல்லென்னுஞ் சொல் எஞ்சி நின்றதென்று. இதனை உதாரணமாகக்காட்டுப அவர் முன்னும் பின்னு மென்பதற்குச் சொல்லென்னும் சொற் கொணர்ந்து கூட்டுவதன் முன்னும் பின்னுமென இடர்ப் பட்டுப் பொருளுரைப்ப.

(45)