9.எச்சவியல்

சில மரபு வகை

இடக்கர்ச்சொல்

442அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல்.
 

அவைக்கணுரைக்கப்படாத சொல்லை அவ்வாய் பாடு மறைத்துப் பிறவாய்பாட்டாற் சொல்லுக: எ - று.

அவைக்கண் வழங்கப்படுஞ் சொல்லை அவையென்றார்.

எ - டு : `ஆன்முன் வரூஉ மீகார பகரம்' எனவும், கண்கழீஇ வருதும்; கான்மே னீர்பெய்து வருதும் எனவும், கருமுக மந்தி செம்பினேற்றை; `புலிலன்றி றந்த நீரல் லீரத்து,' எனவும் இடக்கர்வாய்பாடு மறைத்துப் பிறவாய்ப்பட்டாற் கூறியவாறு.

ஈகாரபகரமென்பதுபோலக் கண் கழுவுதன் முதலாயின அவையல் கிளவியைக் கிடந்தவாறு கூறாது பிறிதோராற்றாற் கிளந்தனவல்ல வெனினும் அவையல் கிளவிப் பொருண்மையை யுணர்த்தலின், ஒற்றுமை நயத்தான் அவையல் கிளவியைப் பிறிதோராற்றாற் கூறிய வாய்பாடாகக் கொள்ளப்படும்; இவை தகுதியும் வழக்கும், (சொல்-14) என்புழித் தகுதியாயடங்குமெனின்;- செத்தாரைத் துஞ்சினா ரென்றல் முதலாயினவன்றே தகுதியாவன; ஆண்டுச் செத்தாரென்பது இலக்கணமாகலின் அதனானும் வழங்கப்படும் தகவு; நோக்கிச் சொல்லுங்காற் றுஞ்சினா ரென்றுஞ் சொல்லப்படும்; ஈண்டையவையல் கிளவியாற் கிளத்தல் வழுவாதலின் மறைத்த வாய்பாட்டானே கிளக்கப்படும்; அதனான் ஆண்டடங்கா வென்பது.

இது வழுவமைதியன்மையாற் கிளவியாக்கத்துக் கூறாராயினார்.


கருமுகமந்தி , செம்பினேற்றை என்பனவற்றுள் , கருமுகம் செம்பின் என்பன மகடூஉ, ஆடூஉ வாகிய இவ்விருபாலார் இடக்க ரவயவங்களை முறையே யுணர்த்து மென்ப.

`புலிநின் றிறந்த நீரல்லீரத்து' புலி நின்று கழித்தகன்ற நன்னீரல்லாத இழிந்த நீரினாலாகிய ஈரத்தினிடத்து. இழிந்த நீர் - மூத்திரம் இப்பொருட்டாதலை , `களிறுநின் றிறந்த நீரல் லீரத்துப் , பால்வீதோன் முலை யகடுநிலஞ் சேர்த்திப் , பசியட முடங்கிய பைங்கட் செந்நாய்' எனவரும் (நற்றிணை 103) செய்யுளடிகளா னறிக.

(46)