ஈ , தா , கொடு எனச் சொல்லப்படும் மூன்றும் ஒருவன் ஒன்றை யிரத்தற்கண் வருஞ்சொல்லாம்; எ-று. அவை பிறபொருண்மேல் வருதலுமுடைமையான், `இரவின் கிளவி யாகிட னுடைய' வென்றார். வழங்கல், உதவல், வீசல் முதலாயின பிறவு முளவாக இவற்றையே விதந்தோதிய தென்னையெனின் : - அவை கொடைப் பொருளவாய் வருவதல்லது இவைபோல இரத்தற் குறிப்பு வெளிப்படுக்கும் இரவின் கிளவியாய்ப் பயின்று வாராமையானும், இன்னார்க்கு இன்ன சொல்லுரித்தென்று வரையறுத்தலும் வழுவமைத்தலுமாகிய ஆராய்ச்சி ஆண்டின்மையானும் இவற்றையே விதந்தோதினாரென்பது. அஃதேல், `ஈயென்கிளவி' (சொல் - 445) என்னுஞ்சூத்திர முதலாய நான்கும் அமையும் ; இச்சூத்திரம் வேண்டா வெனின் :- இவை இரவின் கிளவியாதலும் மூன்றென்னும் வரையறையும் அவற்றாற் பெறப்படாமையின் வேண்டுமென்பது. முன்னிலைச் சொல்லாய் வருவழியல்லது பிறாண்டு இன்ன சொல் இன்னார்க் குரித்தென்னும் வரையறை யில்லென்ப துணர்த்துதற்கு ஈதா கொடுவென முன்னிலை வாய்பாடுபற்றி யோதினார். (48) |