9.எச்சவியல்

சில மரபு வகை

அதற்கு மேலும் ஒரு முடிபு

448கொடுவென் கிளவி படர்க்கை யாயினும்
தன்னைப் பிறன்போல் கூறுங் குறிப்பில்
தன்னிடத் தியலும் என்மனார் புலவர்.
 

கொடுவென்னுஞ் சொல், முதனிலை வகையாற் படர்க்கையாயினும். தன்னைப் பிறனொருவன் போலக் கூறுங் கருத்து வகையால், தன்னிடத்துச் செல்லும்; எ - று.

எ - டு : மேற் காட்டப்பட்டது.

தன்மைக்கும் முன்னிலைக்கு முரிய தாவென்பதனானாக பொதுவாகிய ஈ யென்பதனானாகவன்றே சொல்லற்பாலது; உயர்ந்தான் அங்ஙனந் தானேற்பானாகச் சொல்லாது, கொடுவெனப் படர்க்கை வாய்பாட்டாற் சொல்லும்; ஆண்டு தன்னையே பிறன்போலக் குறித்தானாகலிற் றன்னிடத்தே யாமென இடவழு வமைத்தவாறு.

உயர்ந்தான் தமனொருவனைக் காட்டி இவற்குக் கொடு வென்னுமென்றாரால் உரையாசிரியரெனின் : - ஆண்டுப் படர்க்சைச் சொற்படர்க்கைச் சொல்லோடியைதலான் வழுவின்மையின் அமைக்கல் வேண்டாவாம் ; அதனான் அது போலியுரையென்க.

(52)