பெயர் நிலைக்கிளவியி னாகுநவும் என்றது - ஒரு திணைப்பெயர் ஒருதிணைக்காய் வருவனவும்: எ - று. அவையாவன : ஓரெருத்தை நம்பியென்று வழங்குதலும், ஒருகிளியை நங்கையென்று வழங்குதலுமாம். பிறவுமன்ன, திசைநிலைக் கிளவியி னாகுநவும் என்றது - திசைச் சொல்லி டத்து வாய்பாடு திரிந்து வருவனவும் என்றவாறு. அவை புலியான், பூசையான் என்னுந் தொடக்கத்தன. தொன்னெறி மொழிவயி னாகுநவும் என்றது - முது சொல்லாகிய செய்யுள் வேறுபாட்டின்கண் இயைபில்லன இயைந்தனவாய் வருவனவும் என்றவாறு. அவை யாற்றுட் செத்த வெருமையீர்த்தலூர்க்குயவர்க்குக் கடன் என்பது முதலாயின, மெய்ந்நிலை மயக்கி னாகுநவும் என்றது-பொருண்மயக்காகிய பிசிச்செய்யுட்கட்டிணைமுலாயின திரிந்து வருவனவும் என் றவாறு. அவை. `எழுதுவரிக் கோலத்தா ரீவார்க் குரியார் தொழுதிமைக் கண்ணணைந்த தோட்டார் - முழுதகலா நாணிற் செறிந்தார் நலங்கிள்ளி நாடோறும் பேணற் கமைந்தார் பெரிது.' என்பது புத்தக மென்னும் பொருண்மேற் றிணை திரிந்து வந்தவாறு கண்டுகொள்க. பிறவுமன்ன. மந்திரப்பொருன்வயி னாகுநவும் என்றது - மந்திரப் பொருட்கண் அப் பொருட் குரித்தல்லாச் சொல் வருவனவும் என்றவாறு. இதற்குக்காரணம் மந்திர நூல்வல்லார் வாய்க்கேட்டுணர்க. அன்றியனைத் துங் கடப்பாடிலவே என்றது-அவ்வனைத்தும் வழங்கிய வாறே கொள்வதல்லது இவக்கணத்தான் யாப்புறவுடையவல்ல என்றவாறு.இஃதிச்சூத்திரத்திற்கு ஒரு சாரா ருரை, ஒருசாரார் பிறவுரைப்ப. இஃதியற்சொல்லுந் திசைச்சொல்லும் பிறவும்பற்றி வழுவமைத்ததாகலின், கிளவியாக்க முதலாயினவற்றின்கண் உணர்த்துதற்கியைபின்மையான்; ஈண்டு வைத்தார். (53)
1.`தொன்னெறி மொழிவயினாஅகுநவும் ' என்பதற்கு இவ்வுரையாசிரியர் முது சொல்லாகிய செய்யுள் வேறுபாட்டின் கண் இயைபில்லன இயைந்தனவாய்வருவன : அவை ` யாற்றுட் செத்த எருமையை ஈர்த்தல ஊர்க்குயவர்க்குக்கடன் என்பது முதலியன ' என வரைந்திருந்தனர், இக் தொடர்மொழியின் பொருள் தெற்றெனப் புலப்படலில்லை. இயைபில்லன இயைந்தனவாய் வருதலென்றமையின் ஊர்க்குயவர்க்கு எருமையை ஈர்த்தலில் இயைபு இன்றேனும் இயைபுண்மை ஒருதலையான் வேண்டற்பாலதாம். அன்றியும் அதுமுதுசொல்லாயிருத்தலோடு செய்யுள் வேறுபாடுடையதா யிருக்க வேண்டுமெனவும் ஆணை தந்துள்ளார்; நம் தமிழ் நாட்டின்கண் பண்டைக்காலந்தொட்டுப் பரவை வழக்கின் கண் அடிப்பட்ட சான்றோரால் நெறிப்பட வழங்கிவரும் இம் முதுமொழி பொருத்தமுடையதாகக் காணக்கிடக்கின்றது. அது வருமாறு : வாணிகச் சாத்தொடு சென்றானொருவன் அச்சாத்தினின்றும் பிரிந்து ஒரு பட்டினத்துட் சென்றுபல வெருமைகளைப் பொருள் கொடுத் தேற்றுத் தந்நாடு சேறற்கு ஒருப்பட்டுப் பலப் பல காவதங்கடந்து ஒரு கான் யாற்றடைகரையை யண்மி அவ் வெருமைகளை நீரருந்தச் செய்து அயர்வுயிர்த்துப் பின்னர் அவ்வாற்றைக் கடக்குமமை யத்து, காலமல்லாத காலத்துச் சேய்மைக்கண் பெய்தமழையால் பொருக்கென வெள்ளந்தோன்றி அவ் வெருமைகளை யெல்லாம் அடித்துக்கொண்டு ஓர் ஊர்ப்புறத் தொதுக்கிவிட்டது. அதனையுணர்ந்த அவ்வூரவர் அவைகளை ஈர்த்துக்கொணர்ந்து கரை சேர்த்தற்குப்பலரை வேண்டியும் நாற்றம்மிகுதியாக விருந்தமையின், ஒருவரும் உடன்பட்டிலர் இதனையுணர்ந்த பெரியாரொருவர் இங்ஙன மாய செயல் நேரிடின் இச்செயலை இன்னவர் செய்து முடித்தல் வேண்டு மென நம்மூர் அடங்கலிலிருக்கும்; அதனைக் கணக்கனை யழைத்துக் கேட்பின் உண்மை வெளியாமென உரைத்தனர் அவ்வாறே கணக்கனை யழைத்துக்கேட்க அவன் அடங்கலை எடுத்துவந்து ` கண்ணுறீஇக் கழறுகின்றேன் ' எனக்கூறி, தனதில்லத்திற் சென்று தனக்கு ஆண்டுதோறும் நன்கொடையாகக் கொடுக்கும் பொருளை அவ்வாண்டிற் கொடாத அவ்வூர்க் குயவரையொறுத்தற்குத் தக்க வமைய மிதுவே யெனக் கருதி காட்டெரு முட்டை பொறுக்கி மட்கலஞ் சுட்ட புகையான் மேற்கே மேகந் தோன்றி மின்னி யிடித்து மழைபொழிந்து யாற்றில் நீத்தம் பெருகி யடித்துக் கொல்லும் எருமைகளை ஈர்த்துக் கொணர்ந்து கரையேற்றல் இவ்வூர்க் குயவர்க் கென்றுங் கடனே." என்று ஒரு பழைய ஓலையில் வரைந்து அவ்வடங்கலோடு சேர்த்துக் கட்டி அவ்வூரவர் முன்கொணர்ந்து கட்டையவிழ்த்துப் பல ஏடுகளைத் தள்ளிப் படித்துக் காட்டினன். அதனைக் கேட்ட பெரியார் பலரும் குயவன் சுள்ளையினெழுந்த புகையானாய மேகந்தந்த நீரான் எருமை சாதலின், இவ்வூர்க்குயவரே இவைகளைக் கரையேற்றல் முறையென முடிவு செய்தனர் என்பதாம். இது பொருத்தமாகக் காணப்படுகின்றது.ஆசிரியர் நச்சினார்க்கினியர் , `தொன்னெறி மொழிவயினா அகுநவும்' என்பதற்குச், `சொல்லிடத்துப் பழைய நெறி யானாய் வரும் சொல்லும்,' என உரை கூறி, `முதுமொழி' பொருளுடையனவும் பொருளில்லனவுமென இருவகைப்படும். அவை `யாட்டுளான் இன்னுரை தாரான்' என்றது இடையன் எழுத்தொடு புணராது பொருளறிவுறுக்கும் மொழியைக் கூறு தலன்றி எழுத்தொடு புணர்ந்து பொருளறிவுறுக்கும் மொழியைக் கூறான் என்னும் பொருள் தந்து நின்றது. "யாற்றுட் செத்த எருமையை ஈர்த்தல் ஊர்க்குயவர்க்குக் கடன்" என்பது: `குயனைச்சுள்ளையான் எழுந்த புகையானாய மேகந் தந்த நீரான் எருமை சாதலின், அதனை ஈர்த்தல் குயவர்க்குக் கடனாயிற்றென ஒரு காரணம் உள்ளதுபோலக் கூறுகின்றது.உண்மைப் பொருளன்றி ஒருவன் இயைபின்றிக் கூறிய சொற்கு எடுத்துக் காட்டாகக் கூறப்படுதலின் பொருளுணர்த்தாதாயிற்று' எனவும், இலக்கண விளக்க நூலாசிரியர். "தொன்னெறி மொழிவயினாஅகுநவும்" என்பது அடிப்பட்ட நெறியான் வழங்குதலுடைய முதுமொழியாகிய செய்யுள் வேறுபாட்டின்கண் இயையாதென இயைந்தன வாய்வருவன; அவை "யாற்றுட் செத்த எருமை ஊர்க்குயவர்க்கு இழுத்தல் கடன்" என்றது முதலாயின, ' குயவன் சுள்ளையின் எழுந்த புகையானாகிய மேகந்தந்த நீரான் எருமை சாதலின் குயவர்க்கு ஈர்த்தல் கடனாயிற்று என்க. ஒரு காரணம் உள்ளது போலக் கூறுகின்றது; உண்மைப் பொருளன்றி ஒருவன் இயைபின்றிக் கூறிய சொற்கு எடுத்துக் காட்டாகக் கூறப்படுதலின், இயையாதன இயைந்தனவாய் வருதலாயிற்று' எனவும் கூறியிருத்தலின். இது நன்கு விளங்கும். |