(இ-ள்)வியங்கோளொடு தொடரும் எண்ணுப்பெயர் திணைவிராய் வருதல் வரையார் ; எ-று. எ - டு: ஆவு மாயனுஞ் செல்க எனவரும். தன்மைப் பன்மை வினைபோலாது வியங்கோள் இரு திணைக்கும் உரிய சொல்லாகலான் இருதிணைச் சொல்லையும் முடிக்குமன்றே, அதனான் ஆவு மாயனுஞ் செல்க என்புழி வழுவின்மையின் அமைக்கற்பாற்றன்று எனின் : - இருதிணைப் பொருட்கும் உரித்தேனும் ஒருதிணைப் பொருளைச் சொல்லுதற்கண் இருதிணைப் பொருளும் உணர்த்தாமையின், ஒரு திணையே உணர்த்தல் வேண்டும் ; ஒரு திணை உணர்த்திய வழி ஏனைத்திணைப் பெயரோடு இயையாமையின் திணை வழுவாம் , அதனான் அமைக்கல் வேண்டுமென்பது. 1எண்ணென்றா 2உறழென்றா 3ஆயிரண்டும் இன்னொன்றல்4 வேண்டுமென்பது இலக்கணமாகலான்5 யானுமென்னெஃகமுஞ் சாறும் என்புழியும் ஆவுமாயனுஞ் செல்க என்புழியும் இனனல்லன உடனெண்ணப்படுதலின் வழுவென்றாரால் உரையாசிரியரெனின் : - திணைவேறுபாடுண்டேனும் யானுமென் எஃகமும் என்புழி வினைமுதலும் கருவியுமாகிய இயைபும் ஆவு மாயனும் என்புழி மேய்ப்பானும் மேய்க்கப்படுவனவுமாகிய இயைபும் உண்மையான் உடனெண்ணப்படுதலானும் , யானை தேர் குதிரை காலாள் எறிந்தான் என முன்னர் உதாரணங் காட்டுபவாகலானும் பிறாண்டும் `எண்ணுத் திணை விரவுப் பெயர் அஃறிணை முடிபின' (சொல் - 51) என ஆசிரியர்க்கு ஆராய்ச்சி முடிபுகோடற் கண்ணதாகலானும் அவர்க்கது கருத்தன் றென்க அல்லதூஉம் , திணைவிராய் எண்ணல் வழு என்பதே கருத்தாயின், `நெடுநல் யானையுந் தேரும் மாவும் படையமை மறவரும் உடையம் யாம்' (புறம்-72) எனவும் `இருமனப் பெண்டிருங் கள்ளுங் கவறும்' (குறள் 920) எனவும் படர்க்கைச்சொல்லும் அஃறிணைக் கிளவியும் விராய் எண்ணுதல் வழக்குப்பயிற்சி யுடைமையான் அவையும் அடங்க உயர்திணைச்சொல்லே அஃறிணைக் கிளவி (சொல்-43) எனத் தன்மைச் சொல்லையே விதந் தோதல் குன்றக் கூறலா மாகலானும், அவர்க்கது கருத்தன்மை யறிக. 'ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை யீரும்-பேணித் தென்புல வாழ்நர்க் கருங்கடன் இறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும் எம்அம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மின்.' (புறம்-9) எனத் திணைவிராய் வந்து முன்னிலைவினை கோடல் எற்றாற் பெரிதுமெனின்:- அந்நிகரன செய்யுள் முடிபு எனப்படும், அவற்றை அதிகாரப் புறனடையார்6 கொள்க. திணைவிராய் எனப்படும் பெயர் வியங்கோளல்லா விரவுவினை7யொடு தொடர்ந்து வருவன வழக்கினுள் உளவேல் ஒன்றென முடித்தல் என்பதனாற் கொள்க. (45)
1. ஒரு சொல்லுடன் எண்ணுதற்கண் எண்ணென்றா பொருள்களை வுறழென்றா எனவும் பாடம். 2. எண் - பொருள்களை எண்ணுதல். 3. உறழ் - பொருள்களை வேறுபடுத்தல். 4. இன்னொன்றல் - ஓரினப்பொருள்களையே கூறுதல். 5. இவ்விலக்கணத்தை இவ்வியல் 16 - ஆம் நூற்பாவிற் காண்க. 6. அதிகாரப் புறனடை என்றது இச்சொல்லதிகாரப் புறனடையை. (எச்.67) 7. வியங்கோளல்லா விரவுவினை , செய்யும் என்னும் முற்றும் வேறு இல்லை உண்டு என்னும் குறிப்பு வினைமுற்றுக்களும் ஏவல் வினையும். |