செய்யாயென்னும் வாய்பாட்டதாகிய முன்னிலை முற்றுச்சொல் ஆயென்னு மீறு கெடச் செய் யென்னுஞ்சொல்லாய் நிற்றலுடைத்து; எ - று. ஆகிடனுடைத் தென்றதனால், செய்யா யென ஈறு கெடாது நிற்றலே பெரும்பான்மை யென்பதாம். எ - டு : உண்ணாய், தின்னாய், கிடவாய், நடவாய், தாராய், வாராய், போவாய் என்பன ஈறுகெட உண், தின், கிட, நட,தா,வா,போ எனச் செய்யென் கிளவி யாயின வாறு கண்டு கொள்க. செய்யாயென்னும் முன்னிலை யெதிர்மறை செய்யென் கிளவியாதற் கேலாமையின், செய்யாயென்னும் முன்னிலை வினைச் சொலென்றது விதி வினையையேயாம்.1 தன்னின முடித்த லென்பதனான் வம்மின் தம்மின் என்பன மின்கெடவும், வம், தம் என நிற்றலும், அழியலை அலையலை என்னு முன்னிலை யெதிர்மறை, ஐகாரங்கெட்டு அழியல் அலையல் என நிற்றலுங் கொள்க.ஒன்றென முடித்தலென்பதனால், புகழ்ந்தா ரென்னும் படர்க்கைவினை ஆரீறுகெடக் `புகழ்ந்திகு மல்லரோ' என நிற்றலுங்கொள்க. இவையெல்லாஞ் செய்யுண்முடி பென்பாருமுளர். செய்யா யென்னு முன்னிலையெதிர்மறை எதிர்மறை படாது செய்யென் விதி வினையாதலு முரித்தென் றுரைத் தாரால் உரையாசிரியரெனின்:- அற்றன்று: செய்யாயென்னும் எதிர்மறைவினையுஞ் செய்யா யென்னும் விதிவினையும் முடிந்த நிலைமை ஒக்குமாயினும் எதிர்மறைக்கண் மறையுணர்த்தும் இடைநிலையு முண்மையான், முடிக்குஞ்சொல் வேறெனவே படும். மறையுணர்த்தும் இடைநிலையாவன; உண்ணலன், உண்டிலன், உண்ணாது, உண்ணேன் என்புழி வரும் அல்லும், இல்லும், ஆவும், ஏயும் பிறவுமாம்.உண்ணாய் உண்ணேன் என்புழி எதிர்மறையாகார வேகாரங் கெட்டு நின்றன வெனல் வேண்டும்; அல்லாக்கால் மறைபொருள் பெறப்படாமையின், அதனான் எதிர்மறைச் சொல்லே விதிவினைச்சொல் லாகாமையின் அவர்க்கது கருத்தன்றென்க. அல்லதூஉம், ஆசிரியர் அக்கருத்தினராயின், செய்யாயென்னு மெதிர்மறைவினைச்சொல் என்றோதுவார் மன்; அவ்வாறோதாமையான் அவர்க்கது கருத்தன்மையான் உரையாசிரியர்க்கும் அது கருத்தன்மையறிக. (54)
1.செய்யாய் என்னும் முன்னிலையொருமை யெதிர்மறைச் சொல் செய்யென ஏவற் பொருள்படுவது முண்டென்பதே இந் நூற்பாப்பொருள். தமிழ்ப்பெயர்கள் உருபேற்காமலே எழுவாயாதல் போலத் தமிழ் வினை பகாச் சொற்கள் விகுதி யேற்காமலே ஏவலாகும்.செய்யாய் என்பதன் மறு வடிவான செய்யமாட்டாய் என்னும் எதிர்மறை வினையும் இன்னும் உலக வழக்கில் செய்யமாட்டாயா என எடுத்தலோசையால். வினாப் பொருள்பட்டுப்பின்பு செய் யென்ஏவற் பொருள் தருவதைத் தெளிவாய்க் காண்கின்றோம். நூற்பாவில் செய்யாயென்னும் ஏவல் வினைச்சொல் என்னாமல் முன்னிலை வினைச்சொல் எனக் கூறியிருத்தலையும் நோக்குக. |