9.எச்சவியல்

சில மரபு வகை

`ஈ' `ஏ' என்னும் முன்னிலை ஈறுகள்

451முன்னிலை முன்னர் ஈயும் ஏயும்
அந்நிலை மரபின் மெய்யூர்ந்து வருமே.
 

முன்னிலை வினைச்சொன்முன் வரும் ஈகாரமும் ஏகாரமும் அம் முன்னிலைச்சொற் கேற்ற மெய்யூர்ந்து வரும்; எ - று.

எ - டு : `சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரோ' (அகம்-46), `அட்டிலோலை தொட்டனை நின்மே' (நற்றிணை-300) என அவை முன்னிலைக்கேற்ற மெய்யூர்ந்து வந்தவாறு கண்டுகொள்க.

முன்னிலை யென்றாரேனும், செய்யென் கிளவியாகிய முன்னிலையென்பது அதிகாரத்தாற் கொள்க.

ஈகார மொன்றேயாக, புக்கீ, உண்டீ, உரைத்தீ, சென்றீ என முன்னிலை வினையீற்று வேறுபாட்டிற் கேற்ப மெய் வேறுபட்டு வருதலான், `அந்நிலை மரபின் மெய்' என்றார். ஏகாரம் மசுரமூர்ந்தல்லது வாராது.

இவ்வெழுத்துப்பேறு புணர்ச்சி விகாரமாதலின் ஈண்டுக்கூறற் பாற்றன்றெனின்:- அற்றன்று: `இயற்பெயர் முன்னராரைக் கிளவி' (சொல்-270) அப் பெயரோடு ஒற்றுமைப் பட்டு நின்றாற்போல முன்னிலை முன்னர் ஈயும் ஏயும் முன்னிலைச் சொல்லொடு ஒற்றுமைப்பட்டு நிற்றலான், நிலைமொழி வருமொழி செய்து புணர்க்கப்படாமையான், அம்மெய் புணர்ச்சி விகார மெனப் படாவென்க. அஃதேல், இடையியலுள் `இயற்பெயர் முன்ன ராரைக் கிளவி' (சொல்-270) என்பதனோ டியைய இதனையும் வைக்க வெனின்:- ஆண்டு வைப்பிற் செய்யா யென்பது செய்யென் கிளவியாய வழியது அவ்வீகார வேகார வரவென்பது பெறப்படாமையின் ஈண்டு வைத்தார், `செய்யா யென்னு முன்னிலை வினைச்சொல்' என்பதனை ஈண்டு வைத்தற்கும் இதுவே பயனாதலறிக. முன்னிலைச் சொல் விகாரம் ஒருங்குணர்த்தல் அதற்குப் பயனெனினு மமையும், ஈயென்ப தோரிடைச்சொல் உண்டென்பது இச் சூத்திரத்தாற்பெற்றாம். இவையிரண்டும் ஈண்டுப் புறத்துறவு பொருள்பட நின்றன. அசை நிலை யென்பாருமுளர்.

(55)