9.எச்சவியல்

சில மரபு வகை

புதிய சொற்கள்

452கடிசொல் இல்லை காலத்துப் படினே.
 

இவைதொன்று தொட்டன வல்லன வென்று கடியப்படுஞ் சொல்லில்லை; அவ்வக்காலத்துத் தோன்றி வழங்கப் படுமாயின்; எ - று

எ - டு : சம்பு, சள்ளை, சட்டி, சமழ்ப்பு1 எனவரும் இவை தொன்று தொட்டு வந்தனவாயின், முதலாகாதனவற்றின் கண்.

சாரக் கிளவியு மவற்றோ ரற்றே
அ ஐ ஒளவெனு மூன்றலங்கடையே" (எழு 92)

என விலக்கார் ஆசிரியர்; அதனான் அவை பிற்காலத்துத் தோன்றிய சொல்லேயா மென்பது.

இஃது எழுவகை வழுவமைதியுள் ஒன்றாகாது ஒரு பாதுகாவலாதலின் கிளவியாக்கத் தியைபின்மையான் ஈண்டுக் கூறினா ரென்பது.

இனி ஒருசாரா ருரை;- இன்ன அநுவதிக்குங் காலமா மக்காலத்து , அவை வழுவன்மை எல்லா ஆசிரியர்க்கும் உடம் பாடாகலின் அதனைத் தழுவிக் கொண்டவா றென்க. இவையிரண்டும் இச்சூத்திரத்துக்குப் பொருளாகக் கொள்க.

இனி ஒன்றென முடித்தலாற் புதியன தோன்றினாற் போலப் பழையன கெடுவனவும் உளவெனக் கொள்க. அவை அழான், புழான் முதலியனவும் எழுத்திற்புணர்ந்த சொற்கள் இக்காலத்து வழங்காதனவுமாம்.

(56)

1.சம்பு, சள்ளை, சட்டி, சமழ்ப்பு சமைமுதலிய சொற்கள் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே வழங்கினமை தேற்றமாகலின், " சகரக் கிளவியு மவற்றோ ரற்றே" என்னும் நூற்பா பிற்காலத்திடைச் செருகலாயோ பாடவேறுபாடுள்ள தாயோ இருத்தல் வெண்டும். தொல் காப்பியம் ஓர் அகராதியன்மையின், அதிற் சகரக்கிளவி யின்மை சகரம் மொழி முதல் வராதென்பதற்குச் சான்றன்று; கழகப்பதிப்பு எழுத்ததிகார நச்சினார்க்கினியத்தில் 62 ஆம் நூற்பாவுரை அடிக் குறிப்பைப் பார்க்க.