குறைக்குஞ் சொல்லைக் குறைக்கு மிட மறிந்து குறைக்க; எ - று. குறைக்கும்வழி யறிதலென்பது, ஒரு சொற்குத் தலையுமிடையுங்கடையுமென இடமூன்றன்றே ; அவற்றுள் இன்னுழிக் குறைக்கப்படும் இச்சொல் லென்றறிந்து குறைக்கவென்றவாறு. எ - டு : தாமரை யென்பது, `மரையீதழ் புரையு மஞ்செஞ்சீறடி' எனத் தலைக்கண்ணும் . ஓந்தியென்பது `வேதின வெரிநி னோதிமுது போத்து' (குறுந் - 140 ) என இடைக்கண்ணும் , நீலமென்பது `நீலுண் டுகிலிகை கடுப்ப' எனக் கடைக்கண்ணும் , குறைக்கப்பட்டவாறும் ,அவை பிறாண்டுக் குறைத்தற் கேலாமையுங் கண்டுகொள்க . குறைத்தலாவது ஒரு சொல்லிற் சிறிது நிற்பச் சிறிது கெடுத்தலாகலின் முழுவதுங் கெடுத்தலாகிய தொகுக்கும் வழித் தொகுத்தலின் வேறாத லறிக. `இயற்சொல் திரிசொல்' (சொ - 397) என்னுஞ் சூத்திர முதலாயின செய்யுளதிகாரத்துக் கூறாமையானும், ஒரு காரணத்தாற் கூறினாரேனுஞ் செய்யுட்க ணென்று விதந்து கூறாமையானும் இது வழக்கு முடிபென்பாருமுளர். (57) |