9.எச்சவியல்

சில மரபு வகை

இடைச்சொல் மரபு

455இடைச்சொல் எல்லாம் வேற்றுமைச் சொல்லே.
 

பிறிதொரு சொல்லை வேறுபடுப்பனவும் பிறிதொரு சொல்லான் வேறுபடுக்கப்படுவனவுமெனச் சொல் இரு வகைப்படும் ; பிறிதொரு சொல்லை வேறுபடுத்தலாவது விசேடித்தல். பிறிதொரு சொல்லான் வேறுபடுக்கப்படுதலாவது விசேடிக்கப்படுதல். இடைச் சொல்லெல்லாம் பிறிதொரு சொல்லை வேறு படுக்குஞ் சொல்லாம்; எ - று.

வேறுபடுத்தலும் வேறு படுக்கப்படுதலும் ஆகிய இரண்டும் பொது வகையான் எல்லாச் சொற்குங் கூறாமை எய்துமாகலின் இடைச்சொல்லெல்லாம் வேற்றுமைச் சொல்லென்றதனான் ,இவை வேறுபடுக்குஞ் சொல்லாதலல்லது ஒருஞான்றும் வேறுபடுக்கப்படுஞ் சொல்லாகாவென நியமித்தவாறாம். அவை அன்னவாதல் இடையியலுள் ஓதப்பட்ட இடைச்சொல் வழக்கினுள்ளுஞ் செய்யுளுள்ளும் வரும் வழிக் கண்டு கொள்க.

வேற்றமைச்சொல் வேற்றுமையைச் செய்யுஞ் சொல்லென விரியும் . வேற்றுமையெனினும் வேறுபாடெனினு மொக்கும்.

இடைச்சொல் லெல்லாம் வேற்றுமைச் சொல்லாயினும், அவற்றுள் ஒரு சாரனவற்றை வேற்றுமைச் சொல்லென்றாள்ப ; இயற்சொல்லுள் ஒரு சாரனவற்றை இயற்பெயரென்றாற்போல வென்பது. இதுவுமொரு நயம்.

(59)