மேற் கூறப்பட்ட வினையெச்சமும் வேறுபட்ட பல விலக்கணத்தையுடைய; எ - று. அவையாவன : `உரற்கால் யானை யொடித்துண்டெஞ்சிய' (குறுந் - 232) எனவும், `ஞாயிறு பட்டு வந்தான்' எனவும் செய்தெனெச்சம் வினைமுதல் கொள்ளாது பிறிதின் வினைகோடலும் அஃதீறு திரிதலும், `மோயின ளுயிர்த்த காலை' (அகம் - 5) எனவும், கண்ணியன் வில்லன் வரும் எனவும், முற்றுச் சொல்லது திரிபாய் வருதலும், ஓடிவந்தான் விரைந்து போயினான் எனவும், வெய்ய சிறியமிழற்றுஞ் செவ்வாய் எனவும் செவ்வன் றெரிகிற்பான், புதுவதனியன்ற வணியன் எனவும், தம்மை முடிக்கும் வினைக்கட்கிடந்த தொழிலானும் பண்பானுங் குறிப்பானும் உணர்த்தித் தெரிநிலை வினையுங் குறிப்பு வினையுமாய் முடிக்குஞ் சொல்லை விசேடித்தலும் பிறவுமாம். செய்தெனச்சத்தீறு திரிதல் வினையியலுட் காட்டிப் போந்தாம். `பெருங்கை யற்றவென் புலம்புமுந் துறத்து' என்புழிப் பெருமென்பதை ஒருசாரார் வினையெச்ச வாய்பாடென்ப ; ஒருசாரார் வினைச்சொற்பற்றி நின்றதோ ருரிச்சொலென்ப. இடைச்சொல்லும் உரிச்சொல்லும் மேற்கூறப்பட்ட இலக்கணமேயன்றிப் பிறவிலக்கண முடைய வென்ப துணர்த்தினார். இனி அவையேயன்றி வினையெஞ்சு கிளவியும் பல விலக்கணத்தன வென்பதுபட நின்றமையான், உம்மை இறந்தது தழீஇய வெச்சவும்மை, அவ்விலக்கணம் ஓரியலவன்றித் திரிதலும் வேறு பொருளுணர்த்துதலும் விசேடித்தலு முதலாகிய வேற்றுமையுடையவாகலின், வேறு பல்குறிய வென்றார். வினையெச்சத்துள் விசேடித்தே நிற்பனவுமுளவென்பதூஉம் உணர்த்துகின்றாராகலின், இதனை வினையியலுள்வையாது, ஈண்டு விசேடிக்குஞ் சொல்லுணர்த்துவன வற்றோடு வைத்தார். `பெயர்த்தனென் முயங்க' (குறுந் - 64) என்பது முதலாயின செய்தெனெச்சம் முற்றாய்த் திரிந்தனவென்றும் ஒடித்துண்டெஞ்சிய என்பது முதலாயின செயவெனெச்சம் செய்தெனெச்சமாய்த் திரிந்தன வென்றும் , முன்னருரைத் தாரால் உரையாசிரியரெனின் :- பெயர்த்தனென் முயங்க என்பது முதலாயின எச்சத்திரிபாயின் எச்சப்பொருளுணர்த்து வதல்லது இடமும்பாலும் உணர்த்தற்பால வல்ல. எச்சப் பொருண்மையாவது மூன்றிடத்திற்கும் ஐந்துபாற்கும் பொதுவாகிய வினை நிகழ்ச்சியன்றே ; அவ்வாறன்றி முற்றுச்சொற்கு ஓதிய ஈற்றவாய் இடமும் பாலுமுணர்த்தலின் , அவை முற்றுத்திரிசொல் லெனவே படும். சொன்னிலை யுணர்ந்து வினை கோடன் மாத்திரத்தான் வினையெச்ச மெனின் :- மாரைக் கிளவியும், வினையொடு முடியும் வேற்றுமையும், பிறவுமெல்லாம் வினையெச்சமாவான் செல்லும் ; அதனான் அவர்க்கது கருத்தன்றென்க. அல்லதூஉம் கண்ணியன் வில்லன் வரும் என வினைக்குறிப்பு முற்றாய்த் திரிதற்கேற்பதொரு வினையெச்சம் இன்மையானும், அது கருத்தன்மையறிக. `ஒடித்துண்டெஞ்சிய' என்பதூஉம் ஞாயிறு பட்டு வந்தான் என்பதூஉம் பிறவினை கொண்டனவாயினும், செயவெனெச் சத்திற்குரிய இறந்தகால முணர்த்தலான், ஏனைக்காலத்திற்குரிய செய்தெனெச்சத்தின் திரிபெனப்படா ; செயவெனெச்சத்திற்குரிய காலமுணர்த்தல் வேண்டும். மழை பெய்ய மரங்குழைத்தது எனச் செயவெனெச்சத்திற்கு இறந்தகால முமுரித்தெனின் : - காரண காரியப் பொருண்மை யுணர்த்தும் வழியல்லது செயவெனெச்சம் இறந்தகால முணர்த்தாது ; ஒடித்துண்டலும் ஞாயிறு படுதலும் எஞ்சுதற்கும் வருதற்குங் காரணமன்மையான் ,ஆண்டிறந்தகால முணர்த்தாமையின், செய்தெனெச்சமாய் நின்று தமக்குரிய இறந்தகால முணர்த்தினவெனப்படும் . அதனாற் செயவெனெச்சஞ் செய்தெனச்சமாய்த் திரிந்தன வென்றலும் அவர் கருத்தன்றென்க , ஞாயிறு பட்டு வந்தான் என்பது ஞாயிறுபட்ட பின் வந்தான் என இறந்தகாலமுணர்த்தலும் , ஞாயிறு பட வந்தான் என்பது ஞாயிறு படாநிற்க வந்தான் என நிகழ்கால முணர்த்தலும் வழக்கு நோக்கிக் கண்டுகொள்க. (61) |