9.எச்சவியல்

சில மரபு வகை

குறிப்பால் உணரும் சொற்கள்

459முன்னத்தின் உணரும் கிளவியும் உளவே
இன்ன வென்னுஞ் சொன்முறை யான.
 

சொல்லானன்றிச் சொல்லுவான் குறிப்பாற் பொருளுணரப்படுஞ் சொல்லுமுள ; இப்பொருள் இத்தன்மைய வென்று சொல்லுதற்கண்; எ - று.

எ - டு : செஞ்செவி, வெள்ளொக்கலர் என்புழி மணியும் பொன்னு மணந்த செவி என்றும் , வெளியதுடுத்த சுற்றம் என்றும் குறிப்பா னுணரப்பட்டவாறு கண்டுகொள்க. குழைகொண்டு கோழியெறியும் வாழ்க்கையர் என்புழி அன்ன பெருஞ் செல்வத்தார் என்பதூஉம் குறிப்பா னுணரப்படும்.

இது `தெரிபுவேறு நிலையலுங் குறிப்பிற் றோன்றலும்' (சொல் 157) என்புழி அடங்குமெனின் ஆண்டுப் பொருணிலை இருவகைத் தென்பதல்லது இன்னுழி இப்பொருள் குறிப்பிற் றோன்று மென்னும் வேறுபாடு பெறப்படாமையான் ஆண்டடங்கா தென்பது.

இதுவும் மேலையோத்துக்களுள் உணர்த்துதற் கியைபின் மையான் ஈண்டுணர்த்தினார்.

(63)