வேறுபட்ட வினையையுடைய பல பொருட்குப் பொதுவாகிய சொல்லை ஒன்றற்குரிய வினையால்கிளவார், எ-று. எனவே , பொதுவினையால் கிளப்பர் என்றவாறாம். அவை அடிசில் , அணி , இயம், படையென்னும் தொடக்கத்தன. அடிசில் என்பது உண்பன தின்பன பருகுவன நக்குவன என்னும் நால்வகைக்கும் , அணி என்பது கவிப்பன கட்டுவன செறிப்பன பூண்பன என்னும் தொடக்கத்தனவற்றிற்கும், இயம் என்பது கொட்டுவன ஊதுவன எழுப்புவன என்னும் தொடக்கத்தனவற்றிற்கும், படை என்பது எய்வன எறிவன வெட்டுவன குத்துவன என்னும் தொடக்கத்தனவற்றிற்கும் ,பொதுவாகலின் அடிசில் அயின்றார் , மிசைந்தார் எனவும், அணி அணிந்தார், மெய்படுத்தார் எனவும், இயம் இயம்பினார், படுத்தார் எனவும். படை வழங்கினார் தொட்டார் எனவும், பொதுவினையால் சொல்லுக. அடிசில் தின்றார்,பருகினார் எனவும்; அணி கவித்தார், பூண்டார் எனவும் ; இயம் கொட்டினார், ஊதினார் எனவும்; படை எறிந்தார், எய்தார் எனவும் ஒரு சார்க்குரிய வினையாற் சொல்லின் மரபு வழுவாமென்பது. பொருளின் பொதுமையைச் சொன்மேலேற்றி வேறுவினைப் பொதுச்சொல் என்றார். (46) |