9.எச்சவியல்

சில மரபு வகை

இருசொல் ஒருபொரு ளுணர்த்தல்

460ஒருபொருள் இருசொல் பிரிவில வரையார்.
 

பொருள் வேறுபாடின்றி ஒரு பொருண்மேல் வரும் இரண்டுசொற் பிரிவின்றித் தொடர்ந்துவரின், அவற்றைக் கடியார்; எ - று.

எ - டு : `நிவந்தோங்கு பெருமலை' எனவும் `துறுகன் மீமிசை யுறுகண்' எனவும் வரும்.

பிரிவில வென்றது, வேறொரு சொல்லான் இடையிடப் படாது நிற்பன வென்றவாறு.

இருசொல் ஒரு பொருண்மேல் வருதல் எழுவகை வழுவினுள் ஒன் றன்மையான் ஈண்டுக் கூறினார்.

`வையைக் கிழவன் வயங்குதார் மாணகலந்
தையலா யின்றுநீ நல்கினை நல்காயேற்
கூடலார் கோவோடு நீயும் படுதியே
நாடறியக் கௌவை யொருங்கு'

என்புழி, வையைக் கிழவன் கூடலார்கோ என்பன ஒரு பொருளை வரைந்துணர்த்தலாற் பிரிவிலவாகலின் வரையப் படாவென்றும்,

`கொய்தளிர்த் தண்டலைக் கூத்தப் பெருஞ்சேந்தன்
வைகலு மேநும் வயக்களிறே-கைதொழுவல்
காலேக வண்ணனைக் கண்ணாரக் காணவெஞ்
சாலேகஞ் சார நட'

என்புழிக் காலேகவண்ணன் என்பது அச் சாந்து பூசினாரெல் லார்க்கும் பொதுவாய்க் கூத்தப்பெருஞ்சேந்தனையே வரைந்துணர்த்தாமையின், அவை பிரிவுடையவாமென்றும். உரை யாசிரியர் உரைத்தாரா லெனின் :- அற்றன்று.

`நாணி நின்றோ ணிலைகண் டியானும்
பேணினெ னல்லனோ மகிழ்ந வானத்
தணங்கருங் கடவுளன் னோணின்
மகன்றா யாதல் புரைவதாங் கெனவே' (அகம் - 33)

என்புழி வானத் தணங்கருங் கடவு ளன்னோள் என்பது மகளிர்க்கெல்லாம் பொதுவாய் நாணி நின்றோளை வரைந்துணர்த்தாமையின் சொல்லுவான் குறிப்பான் அவளையே உணர்த்தினாற்போலக் காலேகவண்ணன் என்பதூஉம் பொது வாயினுஞ் சொல்லுவான் குறிப்பாற் கூத்தப் பெருஞ் சேந்தனையே உணர்த்திப் பிரிவிலவாய் நிற்றலான், அவர்க்கது கருத்தன்றென்க.

(64)