ஒருமைக்குரிய பெயர்ச்சொற் பன்மைக்காகு மிடமுமுண்டு: எ - று. எ - டு : `ஏவ லிளையர் தாய்வயிறு கரிப்ப' என்புழித்தாயென்னும் ஒருமை சுட்டிய பெயர் இளையரென்பதனாற் றாயரென்னும் பன்மை உணர்த்தியவாறு கண்டுகொள்க. `பன்மைக் காகுமிடனுமா ருண்டே' யென்பது, ஒருமைச் சொற் பன்மைச் சொல்லோடு தொடர்தற்குப் பொருந்துமிட முண்டென்பதூஉம் படநின்றமையான், `அஃதை தந்தை யண்ணல் யானை யடு போர்ச் சோழர்' என ஒருமைச்சொற் பன்மைச் சொல்லோடு தொடர்தலுங் கண்டுகொள்க. ஈண்டு ஒருமைச்சொற் பன்மைச்சொல்லோடு மயங்குதலுடைமை யான் `ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவி' (சொல் - 36) என் புழி அடங்காமை யறிக. ஏற்புழிக்கோடலென்பதனான் உயர்திணைக் கண்ணது இம் மயக்கமென்று கொள்க. ஆகுமிடமென்பதனால், பன்மையுணர்த்துதற்கும் பன்மைச்சொல்லொடு தொடர்தற்கும் பொருந்தும் வழிக் கொள்க வென்பதாம். (65) |