9.எச்சவியல்

சில மரபு வகை

ஆற்றுப் படையில் முன்னிலை யொருமை பன்மையொடு முடிதல்

462முன்னிலை சுட்டிய வொருமைக் கிளவி
பன்மையொடு முடியினும் வரைநிலை இன்றே
ஆற்றுப்படை மருங்கிற் போற்றல் வேண்டும்.
 

முன்னிலை குறித்து நின்ற ஒருமைச் சொல் , பன்மையொடு முடிந்ததாயினும் , வரையப்படாது ; அம்முடிபு ஆற்றுப்படைச் செய்யுளிடத்துப் போற்றியுணரப்படும்; எ - று.

கூத்தராற்றுப்படையுள் `கலம்பெறு கண்ணுள ரொக்கற்றலைவ' (மலைபடுகடாம் - 50) என நின்ற ஒருமைச் சொற்போய் `இரும்பே ரொக்கலொடு பதமிகப் பெறுகுவிர்' (மலைபடுகடாம் - 157 ) என்னும் பன்மைச் சொல்லோடு முடிந்தவாறு கண்டுகொள்க . ஈண்டு முன்னிலை யொருமைப் பெயராதல் அதிகாரத்தாற் கொள்க.

`ஒருமை சுட்டிய பெயர்நிலைக் கிளவி
பன்மைக் காகு மிடனுமா ருண்டே' (சொல்-461)

என்பதனான் இதுவும் அடங்குதலின் , இச்சூத்திரம் வேண்டா வெனின் : - பன்மையொடு முடியுமிடனுமாருண்டே என்னாது பன்மைக்காகு மிடனுமாருண்டே என்றாராதலின் , ஆண்டு பன்மைச் சொற்கொண்டு முடியாது ஒருமைச் சொற் பன்மையுணர்த்துதலும் பன்மைச் சொல்லொடு ஒரு பொருட்டாகிய துணையாய் மயங்குதலுமுணர்த்தினார் . அதனான் இக்கொண்டு முடிபு ஆண்டடங்காதென்பது, அல்லதூஉம், இம்முடிபு செய்யுட் குரித்தென்றமையானும் ஆண்டடங்காமையறிக.

பொதுவகையான் ஆற்றுப்படைமருங்கி னென்றாராயினும் சுற்றத்தோடு சுற்றத்தலைவனை ஆற்றுப்படுத்தற் கண்ணது இம் மயக்கமென்பது பாதுகாத்துணர்கவென்பார் `போற்றல் வேண்டும்' என்றார்.

`பான்மயக் குற்ற வையக் கிளவி' (சொல் - 23) என்பதனாற் கூறிய ஒருமைப்பன்மை மயக்கம் வழுவமைதியாயினும் இலக்கணத்தோடத்துப் பயின்று வரும் ஒருமை சுட்டிய பெயர் நிலைக்கிளவி பன்மைக் காதலும், முன்னிலையொருமை பன்மையொடு முடிதலும் அன்னவன்றிச் சிறுவழக்கினவாதலின், ஆண்டு வையாது ஈண்டு வைத்தார்.

ஒருவர் ஒருவரை ஆற்றுப்படுத்தற்கண் முன்னிலை யொருமை பன்மையொடு முடிதல் வழக்கிற்கும் ஒக்குமாகலான், ஆற்றுப்படையெனப் பொதுவகையாற் கூறினார்.

(66)