9.எச்சவியல்

சொல்லதிகாரத்திற்குப் புறனடை

இருவகை வழக்கினும் நூல்வழக்கின் முதன்மை

463செய்யுள் மருங்கினும் வழக்கியன் மருங்கினும்
மெய்பெறக் கிளந்த கிளவி யெல்லாம்
பல்வேறு செய்தியின் நூல்நெறி பிழையாது
சொல்வரைந் தறியப் பிரித்தனர் காட்டல்.
 

செய்யுளிடத்தும் வழக்கிடத்தும் இவ்வதிகாரத்தின்கண் பொருள்பெறச் சொல்லப்பட்ட சொல்லெல்லாவற்றையும் பல்வேறு செய்கையுடைய தொன்னூனெறியிற் பிழையாது சொல்லை வேறுபடுத்துணருமாற்றாற் பிரித்துக் காட்டுக; எ - று.

என்றது, `நிலப்பெயர் குடிப்பெயர்' எனவும், `அம்மாமெம் ஏம்' எனவும் பொதுவகையாற் கூறப்பட்டன . அருவாள நிலத்தானென்னும் பொருட்கண் அருவாளன் எனவும் ; சோழநிலத்தானென்னும் பொருட்கண் சோழியன் எனவும் ; இறந்தகாலத்தின்கண் உண்டனம் , உண்டாம் எனவும் ; நிகழ்காலத்தின்கண் உண்ணா நின்றனம் உண்ணா நின்றாம் , உண்கின்றாம் எனவும் ; எதிர்காலத்தின்கண் உண்குவம் உண்பாம் எனவும் வேறுபட்டு வருமன்றே ; அவ்வேறுபாடெல்லாம் கூறிற் பல்குமென்றஞ்சிக் கூறிற்றிலனாயினும் தொன்னூ னெறியிற் பிழையாமல் அவ் வேறுபாடு ணரபிரித்துக் காட்டுக நூல் வல்லாரென்றவாறாயிற்று.

இது பிற நூன் முடிந்தது தானுடம்படுதலென்னுந் தந்திரவுத்தி பிறவுமன்ன.

செய்கை விதி -

சொல்வரைந்தறிய வெனவே வரைந்தோதாது பொது வகையானோதப்பட்டவற்றின் மேற்று இப்புறனடை யென்பதாம்.

இனி ஓருரை :- செய்யுளிடத்தும் வழக்கிடத்தும் என்னாற் கிளக்கப்படாது தொன்னூலாசிரியராற் கிளக்கப்பட்டு எஞ்சி நின்ற சொல்லெல்லாவற்றையும் அவ்வத் தொன்னூனெறியிற் பிழையாமைச் சொல்லை வரைந்துணரக்கொணர்ந்து பிரித்துக்காட்டுக என்றவாறு.

என்னாற்கிளக்கப்படாது என்பது பெற்றவாறென்னை யெனின் :- கிளந்தன பிற நூலிற் கொணர்ந்து காட்டல் வேண்டாமையிற் கிளக்கப்படாதன வென்பது மென்க.

புறனடையாற் கொள்ளப்படுவன :- யானு நீயு மவனுஞ் செல்வேம் எனவும் , யானு நீயுஞ் செல்வேம் எனவும் ஏனையிடத்திற்குரிய சொல் தன்மைச் சொல்லோ டியைந்தவழித் தன்மையான் முடிதலும் அவனு நீயுஞ் சென்மின் எனப் படர்க்கைச்சொன் முன்னிலையோ டியைந்த வழி முன்னிலையான் முடிதலும் , நில்லாது பெயர்ந்த பல்லோருள்ளும் என்புழிப் பல்லே முள்ளுமெனத் தன்மையாகற் பாலது பல்லோருள்ளுமெனப் படர்க்கைப் பன்மையாயவழி அமைதலும் ,

`முரசுகெழு தானை மூவருள்ளு

மரசெனப் படுவது நினதே பெரும'(புறம்-35)

என்புழி மூவிருள்ளுமென முன்னிலையா கற்பாலது மூவருள்ளு மெனப்படர்க்கையாயவழி அமைதலும். `இரண்டனுட் கூர்ங் கோட்ட காட்டுவல் ' என்புழிக் கூர்ங்கோட்டதென ஒருமை யாகற்பாலது கூர்ங்கோட்டவெனப் பன்மையாவழி அமைதலுமாம். பிறவுமுளவேற் கொள்க.

அகத்தியமுதலாயின எல்லாவிலக்கணமும் கூறலிற் பல்வேறு செய்தியினூலென்றார்.

இவ்விரண்டுரையும் இச் சூத்திரத்திற்குரையாகக் கொள்க.

(67)

எச்சிவியல் முற்றிற்று.