1.கிளவியாக்கம்

எண் ஒருமைக்குரிய சொற்கள்

பன்மைக் குரிய சொற்கள்

47எண்ணுங் காலும் அது அதன் மரபே.
 

(இ-ள்) வேறுவினைப் பொருள்களைப் பொதுச்சொல்லால் கூறாது பிரித்தெண்ணுமிடத்தும் அதனிலக்கணம் ஒரு வினையாற் கிளவாது பொதுவினையாற் கிளத்தலேயாம். எ-று.

எ - டு: சோறுங்கறியும் அயின்றார், யாழுங்குழலும் இயம்பினார் எனவரும். சோறுங்கறியும் தின்றார் , யாழுங்குழலும் ஊதினார் எனின் வழுவாம். அஃதேல் ,`ஊன் துவை கறிசோறுண்டு வருந்துதொழில் அல்லது' (புறம்.14) என்புழி உண்டென்பது ஒன்றற்கே உரிய வினையாகலின் வழுவாம் பிறவெனின்: உண்டலென்பது உண்பன தின்பன எனப் பிரித்துக்கூறிம் வழிச் சிறப்பு வினையாம்; பசிப்பிணி தீர நுகரப்படும் பொருளெல்லாம் உணவெனப்படுமாகலின் பொது வினையுமாம், அதனானது வழுவன்றென்பது கறியொழித்து ஏனையவற்றிற்கெல்லாம் உண்டற்றொழில் உரித்தாகலின் பன்மைபற்றிக் கூறினார் எனினும் அமையும்.

(47)