(இ-ள்) இரட்டித்து நின்று பொருளுணர்த்துஞ் சொற்கள் இரட்டித்து நிற்றலில் பிரிந்து நில்லா ; எ-று. எ - டு: சுருசுருத்தது, மொடுமொடுத்தது என இசை பற்றியும், கொறுகொறுத்தார், மொறுமொறுத்தார் எனக்குறிப்பு பற்றியும், குறுகுறுத்தது, கறுகறுத்தது எனப் பண்புபற்றியும் இரட்டித்து வந்தன. பிரிந்து நில்லாமைகண்டு கொள்க. அஃதேல், குறுத்தது குறுத்தது எனப்பிரிந்தும் வந்தனவாலெனின்: அற்றன்று. குறுத்த தென்பதோர் சொல் குறுவென்பதோர் சொல்லடுத்துக் குறுகுறுத்ததென நின்று குறுமை மிகுதி உணர்த்திற்றாயின் குறுத்ததென்பது குறுமையுணர்த்தக் குறுவென்பது மிகுதி உணர்த்திற்றாதல் வேண்டும். குறுவென்பது மிகுதியுணர்த்தாமையின் குறு குறுத்ததென்பது ஒரு சொல்லாய் நின்று அப்பொருளுணர்த்திற் றெனவேபடும். அதனாற்றான் அக்குறுமை மாத்திரம் உணர்த்தி நிற்பது அதனின் வேறாமென்பது. கறுகறுத்தது தென்பதுக்கும் ஈதொக்கும். கறுத்தது கறுத்தது, குறுத்தது குறுத்தது எனச் சொன்முழுவதும் இருமுறை வாராமையின் அடுக்கன்மையறிக. ஈண்டிரட்டைக் கிளவி யென்றது. மக்களிரட்டை விலங்கிரட்டை போல வேற்றுமையுடையனவற்றையன்றி இலையிரட்டையும் பூவிரட்டையும் போல ஒற்றுமையும் வேற்றுமையும் உடையனவற்றை யென்று உணர்க. இரட்டித்து நின்று பொருளுணர்த்துவனவற்றைப் பிரித்து வழங்கல் மரபன்மையின், மரபுவழுக் காத்தவாறு. (48) |