1.கிளவியாக்கம்

எண் ஒருமைக்குரிய சொற்கள்

பன்மைக்குரிய வழக்குகள்

49ஒருபெயர்ப் பொதுச்சொல் உள்பொருள் ஒழியத்
தெரிபுவேறு கிளத்தல் தலைமையும் பன்மையும்
உயர்திணை மருங்கினும் அஃறிணை மருங்கினும்.
 

(இ-ள்) உயர்திணைக்கண்ணும் அஃறிணைக்கண்ணும் ஒரு பெயராய்ப் பல்பொருட்குப் பொதுவாகிய சொல்லைப் பிற உள் பொருளொழியத் தெரிந்து கொண்டு பொதுமையின் வேறாகச் சொல்லுக தலைமையானும் பன்மையானும் ; எ-று.

தெரிபு என்பதற்குச் செயப்படுபொருள் தலைமையும் பன்மையுமேயாம்.

பிறரும் வாழ்வாருளரேனும் பார்ப்பனச்சேரி1 யென்றல் உயர்திணைக்கண் தலைமை பற்றிய வழக்கு.எயினர் நாடென்பது அத்திணைக்கண் பன்மை பற்றிய வழக்கு. பிற புல்லும் மரனும் உளவேனும் கமுகந்தோட்டம் என்றல் அஃறிணைக்கண் தலைமை பற்றிய வழக்கு. ஓடுவங்காடென்பது அத்திணைக்கண் பன்மை பற்றிய வழக்கு. பார்ப்பார் பலராயினும் கமுகு பலவாயினும் அவை தாமே பன்மை பற்றிய வழக்காம்.

பலபொரு ளொருசொல்லின் நீக்குதற்கு ஒரு பெயரென்றார்.

ஒன்றென முடித்தல் என்பதனான், அரசர் பெருந்தெரு, வயிரகடகம், ஆதீண்டுகுற்றி, ஆனதர், எருத்தில் எனப் பொதுச் சொல்லின்றி வருவனவுங் கொள்க.

உள்பொருளெல்லாம் கூறாது ஒன்றனையெடுத்துக் கூறுதன் மரபன்றாலின், பொதுச்சொல் மேற்சொல் நிகழுமாறு உணர்த்திய முகத்தான் மரபு வழுக் காத்தவாறு.

(49)

1. பண்டைக்காலத்தில் ஒன்றாகச் சேர்ந்திருந்த ஒரு குலத்தார் வீட்டுத் தொகுதிக்குச் சேரி என்று பெயர். அது இக்காலத்தில் குடி அல்லது தெரு எனப்படும், சேரி என்பது நகருக்குப் புறம்பாக உள்ள தாழ்த்தப்பட்டோர் இருக்கையைக் குறித்தது பிற்கால வழக்கு. அக்கிரகாரம் என்பது பார்ப்பன வழக்கு.