1.கிளவியாக்கம்

2.பால்

ஆண்பால் ஈறு

5னஃகான் ஒற்றே ஆடூஉ அறிசொல்.
 

னஃகானாகிய ஒற்று ஆடூஉ அறிசொல்லாம் ; எ-று.

எ - டு:உண்டனன், உண்டான், உண்ணாநின்றனன் ,உண்ணாநின்றான், உண்பன், உண்பான், கரியன், கரியான் என வரும்.

ஆடூஉ அறிசொல்லாவது னகார ஈற்றுச் சொல்லாயினும், பால் உணர்த்துதற் சிறப்பு நோக்கி `னஃகான் ஒற்றே' என்றார். `அறமாவது அழுக்காறின்மை' என்றாற்போல, னஃகான் ஒற்று ஆடூஉவறிசொல் என்றாராயினும், ஆடூஉ அறிசொல்லாவது னஃகான் ஒற்றென்பது கருத்தாகக் கொள்க. `னஃகான் ஒற்று' முதலாயினவற்றிற்கும் இவை ஒக்கும். ஏகாரம் அசைநிலை.

உரையாசிரியர் பிரிநிலை யென்றாராலெனின், பிரிநிலையாயின் ஆடூஉவறி சொற்கு இலக்கணங் கூறுதலன்றிப் பிரித்து அதன் சிறப்புணர்த்துதலே கருத்தாமாகலின் அவ்வுரை போலியுரை என்க.

(5)