1.கிளவியாக்கம்

எண் ஒருமைக்குரிய சொற்கள்

பன்மைக்குரிய வழக்குகள்

51பலவயி னானும் எண்ணுத்திணை விரவுப்பெயர்
அஃறிணை முடிபின செய்யு ளுள்ளே.
 

திணை விராய் எண்ணப்பட்ட பெயர் செய்யுளகத்துப் பெரும்பான்மையும் அஃறிணைச்சொற் கொண்டு முடியும் ; எ-று.
எ - டு:

வடுக ரருவாளர் வான்கரு நாடர்
சுடுகாடு பேயெருமை யென்றிவை யாறுங்
குறுகா ரறிவுடையார்"

எனவும்,

கடுஞ்சினத்த கொல்களிறுங்
கதழ்பரிய கலிமாவும்
நெடுங்கொடிய நிமிர்தேரும்
நெஞ்சுடைய புகன்மறவருமென
நான்குடன் மாண்ட தாயினும்" (புறம் - 55)
எனவும் வரும்.

எண்ணுத்திணை விரவுப்பெயர் பெரும்பான்மையும் அஃறிணைச் சொற்கொண்டு முடியுமெனவே, சிறுபான்மை உயர்திணைச் சொற்கொண்டு முடியவும் பெறுமென்பதாம்.
எ - டு:

பார்ப்பார் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர்
மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டு" (சிலப்-வஞ்சினமாலை)

எனவும்,

பார்ப்பார் தவரே சுமந்தார் பிணிப்பட்டார்
மூத்தா ரிளையார் பசுப்பெண்டி ரென்றிவர்கட்
காற்ற வழிவிலங்கி னாரே பிறப்பிடைப்
போற்றி யெனப்படு வார்" (ஆசாரக்கோவை - 94)
எனவும் வரும்.

இருதிணைப் பெயரும் விராய் வந்து ஒரு திணைச் சொல்லான் முடிதல் வழுவாயினும் , செய்யுளகத்தமைக எனத் திணைவழு அமைத்தவாறு.

பாணன் பறையன் துடியன் கடம்பனென்று
இந்நான் கல்லது குடியு மில்லை 1 (புறம் - 335)

என இருதிணைப் பெயரும் விரவி வாராது உயர்திணைப் பெயரே வந்து செய்யுளுள் அஃறிணைமுடிபு கொண்டன என்று உரையாசிரியர் கூறினாராலெனின் - பாணன் முதலாயினாரைக் குடியென்று சுட்டிய வழிக் குடிக்கேற்ற தொகை கொடுத்தல் வழுவனமையான், அவ்வுரை போலியுரை யென்க. குடியென்று சுட்டாதவழிப் பாணன் பறையன் துடியன் கடம்பன் என்று இந்நால்வருமல்லது குடியில்லை யென்றேயாம்.

தம்முடைய தண்ணளியுந் தாமுந்தம் மான்றேரும்
எம்மை நினையாது விட்டனரேல் விட்டகல்க"

எனவும்,

யானுந் தோழியும் ஆயமும் ஆடுந் துறைநண்ணித்
தானுந் தேரும் பாகனும் வந்தென் னலனுன்டான்
[தேனும் பாலும் போல்வன சொல்லிப் பிரிவானேல்
கானும் புள்ளுங் கைதையு மெல்லாங் கரியன்றே"]

எனவும் இவை யெவ்வாறு வந்தனவோவெனின் : - அவை தலைமைப் பொருளையும் எண்ணித் தலைமைப் பொருட்கு வினை கொடுப்பவே தலைமையில் பொருளும் முடிந்தனவாவதோர் முறைமை பற்றி வந்தன. ஈண்டைக்கெய்தா என்பது. தானுந்தன் புரவியுந் தோன்றினான் என்பதுமது.

(51)

1. பாணன், பறையன் முதலிய பெயர்கள் இங்கு மக்களைக் குறித்த ஆண்பாற் பெயர்களல்ல ; மக்கள் வகுப்பைக் குறித்த குடிப்பெயர்கள் ; ஆதலால் அஃறிணையாம்.