1.கிளவியாக்கம்

எண் ஒருமைக்குரிய சொற்கள்

பலபொரு ளொருசொல் அமையும் வகை

52வினைவேறு படூஉம் பலபொரு ளொருசொல்
வினைவேறு படாஅப் பலபொரு ளொருசொலென்று
ஆயிரு வகைய பலபொரு ளொருசொல்.
 

வினைவேறுபடும் பலபொருளொரு சொல்லும் வினை வேறுபடாப் பலபொருளொரு சொல்லும் என இரண்டு வகைப்படும் பலபொருளொரு சொல் ; எ-று.

இனமுஞ் சார்பும் உளவேனும் வேறுபடுத்தற்கண் வினை சிறப்புடைமையின், அதனாற் பெயர் கொடுத்தார், ஆதீண்டு குற்றி யென்பது போல.

இலக்கணச் சூத்திரங்களே1 யமையும் இச்சூத்திரம் வேண்டாபிறவெனின் : - இருவகைய வென்னும் வரையறை யவற்றால் பொறப்படாமையானும், வகுத்துப் பின்னும் இலக்கணங் கூறியவழிப் பொருள் இனிது விளங்குதலானும், இச்சூத்திரம் வேண்டுமென்பது.

(52)

1. இலக்கணச் சூத்திரங்கள் வரையறை(Definition)கூறும் நூற்பாக்கள்.