1.கிளவியாக்கம்

எண் ஒருமைக்குரிய சொற்கள்

பலபொரு ளொருசொல் அமையும் வகை

53அவற்றுள்
வினைவேறு படூஉம் பலபொரு ளொருசொல்
வேறுபடு வினையினும் இனத்தினுஞ் சார்பினுந்
தேறத் தோன்றும் பொருள்தெரி நிலையே.
 

அவ்விரண்டனுள்ளும், வினைவேறுபடும் பல பொருளொரு சொல், ஒரு பொருட்கே சிறந்த வினையானும், இனத்தானும் சார்பானும், பொருள் தெரிநிலைக்கண் பொதுமை நீங்கித் தெளிபத் தோன்றும் ; எ-று.

மாஎன்பது ஒருசார் விலங்கிற்கும் மரத்திற்கும் வண்டிற்கும் பிறபொருட்கும் பொது. குருகு என்பது ஒரு பறவைக்கும் உலைமூக்கிற்கும், வளைக்கும் பிறவற்றிற்கும் பொது. நாகம் என்பது மலைக்கும் ஒருசார் மரத்திற்கும் யானைக்கும் பாம்பிற்கும் பிறவற்றிற்கும் பொது. சே என்பது ஒருசார்ப் பெற்றத்திற்கும் ஒரு மரத்திற்கும் பிறவற்றிற்கும் பொது.

மாப்பூத்தது ; மாவுமருது மோங்கின என வேறுபடு வினையானும் இனத்தானும் , மரமென்பது விளங்கிற்று. கவசம் புக்கு நின்ற மாக்கொணா வென்றவழிக் குதிரையென்பது சார்பினால் விளங்கிற்று. குருகு முதலாயினவுமன்ன.

வேறுபடுவினையினு மென்றாரேனும், ஒன்றென முடித்த லென்பதனான் இம்மாவயிரம், வெளிறு என வேறுபடுக்கும் பெயருங் கொள்ளப்படும்.

இனத்தொடு சார்பிடை வேற்றுமை யென்னையெனின் : - ஒரு சாதிக்கணணைந்த சாதி இனமெனப்படும் ; அணைந்த சாதியன்றி ஒருவாற்றானியை புடையது சார்பெனப்படுமென்பது.

(53)