1.கிளவியாக்கம்

எண் ஒருமைக்குரிய சொற்கள்

பலபொரு ளொருசொல் அமையும் வகை

541ஒன்றுவினை மருங்கின் ஒன்றித் தோன்றும்
வினைவேறு படாஅப் பலபொரு ளொருசொல்
நினையுங் காலைக் கிளந்தாங்கு இயலும்.
 

வேறுபடாத வினை கொண்டவழி வேறுபடாது தோன்றும் வினை வேறுபடாப் பலபொருளொருசொல் ஆராயுங்கால் கிளந்து சொல்லப்படும்;2 எ-று.

எ - டு: மாமரம் வீழ்ந்தது விலங்குமா வீழ்ந்தது என வரும்.

வினைவேறுபடாப் பலபொருளொருசொ லென வேறுநிற்பனவில்லை வேறுபடுவினை முதலாயினவற்றான் வேறுபடுவனதாமே பொது வினை கொண்டவழி வினை வேறுபடாப் பல பொருளொரு சொல்லா மென்பது அறிவித்தற்கு `ஒன்றுவினை மருங்கி னொன்றித் தோன்றும்' என்றார். `ஒன்றுவினை மருங்கி னொன்றித் தோன்றும்' என ஒரு சூத்திரமாக உரையாசிரியர் பிரித்தாராலெனின் : - அங்ஙனம் பிரிப்பின் ஒன்றுவினை மருங்கினொன்றித் தோன்றுதலும் வினைவேறுபடூஉம் பலபொருளொரு சொற்கே இலக்கணமாய் மாறுகோடலானும் வினைவேறுபடுவன தாமே பொது வினை கொண்டவழி வினைவேறு படாதனவாமென்பது அதனாற் பெறப்படாமையானும் அது போலியுரை யென்க.

முன்னும் பின்னும் வருஞ்சார்பு முதலாயினவற்றாற் குறித்த பொருள் விளங்காக்கால் கிளந்தே சொல்லுகவென யாப்புறுத்தற்கு `நினையுங்காலை' என்றார்.

ஆங்கென்பது உரையசை.

குறித்த பொருள் விளங்காமைக் கூறல் மரபன்மையின் மரபுவழுக் காத்தவாறு.

(54)

1.`ஒன்றுவினை மருங்கி னொன்றித் தோன்றும்' என்பது ஒரு நூற்பாவாகவும் மற்ற இரண்டடியும் வேறொரு நூற்பாவாகவுங் கொண்டு பொருள் கூறுவர் இளம்பூரணர்.

2. கிளந்து சொல்லுதல் - மாமரம் விலங்குமா என்றாற் போல அவ்வப் பொருளைப் பெயர் கூறிச்சொல்லுதல்.