ஒருபொருள் வேறுபாடு குறித்தோன், அஃது ஆற்றல் முதலாயினவற்றால் விளங்காதாயின் , அதனைத் தெரித்துச் சொல்லுக ; - எ-று. எ - டு: `அரிதாரச் சாந்தங் கலந்ததுபோல வுருகெழத் தோன்றி வருமே - முருகுறழும் அன்பன் மலைப்பெய்த நீர்' எனவும், `வாரு மதுச்சோலை வண்டுதிர்த்த நாண்மலரால் நாறு மருவி நளிமலை நன்னாட' எனவும் வரும்.`கலந்ததுபோல வருமே யிலங்கருவியன்பன் மலைப் பெய்தநீர்' எனவும் , `நாறு மருவி நளிமலை நன்னாட' எனவும் தெரித்து மொழியாதவழிக் குறித்தது விளங்காது வழுப்படுதலின் மரபுவழுக் காத்தவாறு. வடநூலார் இதனை நேயமென்ப. 'ஊட்டியன்ன வொண்டளிர்ச் செயலை' (அகம் - 68) என் புழி இன்னதனை யென்று தெரித்து மொழியாமையின் வழுவாம் பிற வெனின் : - உவமை யென்னும் அலங்காரமாயினன்றே இன்ன தொன்றனையெனல்1 வேண்டுவது. செயலையந் தளிரினது செய்யாத நிறத்தைச்2 செய்ததுபோலக் கூறுங் கருத்தினனாகலிற் பிறிதோரலங்காரமாம்3 அதனால் அது கடாவன றென்பது. `படுத்துவைத் தன்ன பாறை மருங்கின் எடுத்துநிறுத் தன்ன விட்டருஞ் சிறு நெறி' (மலைபடு-15) என இன்னோரன்ன வெல்லாம் அவ்வலங்காரம் பற்றி வந்தன. 'ஒல்லேங் குவளைப் புலாஅன் மகன்மார் பிற் புல்லெருக்கங் கண்ணி நறிது' என்புழிக் குவளைப் புலால் நாறுதற்கும் எருக்கங்கண்ணி நறிதாதற்கும் காரணங் கூறாமையின் வழுவாம் பிறவெனின்:-புதல்வற் பயந்த பூங்குழன் மடந்தை பரத்தையிற் பிரிந்து வந்த கிழவனொடு புலந்துரைக்கின்றாளாகலின் குவளை புவால் நாறுதற்கு அவன் தவற்றோடு கூடிய அவள் காதல் காரணமென்பதூஉம், எருக்கங்கண்ணி நறிதாதற்கு மகிழ் நன் செய்த துனி கூர் வெப்பம் முகிழ்நகை முகத்தால் தணிக்கும் புதல்வன்மேல் ஒரு காலைக் கொருகால் பெருகு மன்பு காரணமென்பதூஉம் பெறப்படுதலின், வழுலாகாதென்பது. மீக்கூற்ற மென்புழிப்போலக் கூற்றுக் கூற்றமென நின்றது. (55)
1. இன்னதொன்றனை யெனல் - இன்ன பொருளை ஊட்டியன்ன என்பது. 2. செய்யாத நிறம் - ஊட்டாத இயற்கை நிறம். 3. பிறிதோரலங்காரம் - தற்குறிப் பேற்றவணி. |