1.கிளவியாக்கம்

புறனடை

திணைக்குப் புறனடை

56குடிமை ஆண்மை இளமை மூப்பே
அடிமை வன்மை விருந்தே குழுவே
பெண்மை அரசே மகவே குழவி
தன்மை திரிபெயர் உருப்பின் கிளவி
காதல் சிறப்பே செறற்சொல் விறற்சொலென்று
ஆவறு மூன்றும் உளப்படத் தொகைஇ
அன்ன பிறவும் அவற்றொடு சிவணி
முன்னத்தி னுணருங் கிளவி யெல்லாம்
உயர்திணை மருங்கின் நிலையின ஆயினும்
அஃறிணை மருங்கின் கிளந்தாங்கு இயலும்.
 

குடிமை முதலாக விறல்சொல் ஈறாகச் சொல்லப்பட்ட பதினெட்டு முளப்பட அன்ன பிறவும் அவற்றோடு பொருந்தித் தொக்கு முன்னத்தினுணருங் கிளவிகளெல்லாம், உயர்திணைப் பொருண்மேல் நின்றனவாயினும் ,அஃறிணைப்பொருளை யுணர்த்தி நின்றவழிப்போல, அஃறிணைமுடிபே கொள்ளும்; எ-று.

எ - டு: குடிமை நன்று ,குடிமை தீது ; ஆண்மை நன்று, ஆண்மை தீது எனவரும், ஒழிந்தனவற்றிற்கும் இவ்வாறு பொருந்தும் வினை1 தலைப்பெய்க.

தன்மை திரிபெயர் அலி. இதனோடு ஒருபொருட் கிளவியாய் வருவனவுங் கொள்க.

உறுப்பின் கிளவி குருடு முடம் என்னுந் தொடக்கத்தன. காதற்சொல் பாவை யானையென ஒப்புமை கருதாது காதல் பற்றி வருவன. சிறப்புச்சொல் கண்போலச் சிறந்தானைக் கண்ணென்றலும் உயிர்போலச் சிறந்தானை உயிரென்றலும் என இவை முதலாயின. செறற்சொல் செறுதலைப் புலப்படுக்கும் பொறியறை கெழீஇயிலி யென்னுந் தொடக்கத்தன. விறற்சொல் விறலையுணர்த்தும் பெருவிறல் அருந்திறல் என்னுந் தொடக்கத்தன. தன்மை திரிபெயர் முதலாயின பொருள் வகையான் ஆறாக அடக்கப்பட்டன.

குடிமை, ஆண்மை, இளமை , மூப்பு , அடிமை , பெண்மை, உறுப்பின் கிளவி, சிறப்புச்சொல், விறற்சொல் என்பன உயர்திணைக் கண் ஆகுபெயராயல்லது வாரா ; அல்லன இருதிணைக்கண்ணும் ஒத்தவுரிமையவெனக் கொள்க. காதல் பற்றிச் சிறுவனை யானையென்றலும் ஆகுபெயராமன்றோ எனின் : - யாதானு மோர் இயைபுபற்றி ஒன்றின் பெயர் ஒன்றற்காயது ஆகுபெயராம்; இயைபு கருதாது காதல் முதலாயினவற்றான் யானை யென்றவழி ஆகுபெயருள் அடங்கா வென்பது. சிறுவனை யானை யென்றலும் ஒன்றன் பெயர் ஒன்றற்காத லொப்புமையான் ஆகுபெய ரென்பாரு முளர்.

சொல்லா னன்றித் திணைவேறுபாடு சொல்லுவான் குறிப்பொடு படுத்துணரப்படுதலின், `முன்னத்தினுணருங் கிளவி' என்றார்.

'அஃறிணை முடிபின என்னாது ' அஃறிணை மருங்கிற் கிளந்தாங்கியலும் எனப் பொதுப்படக் கூறியவதனால் குடிமை நன்று, குடிமை நல்ல ; அடிமை நன்று, அடிமை நல்ல என ஏற்புழி ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாய் நிற்றலுங் கொள்ளப்படும்.

அன்ன பிறவும் என்றதனான் வேந்து வேள் குரிசில் அமைச்சு புரோசு என்னுந் தொடக்கத்தனவுங் கொள்க.

குடிமை முதலியன உயர்திணை யுணர்த்தும்வழி அஃறிணையான் முடிதல் வழுவாயினும் அமைகவெனத் திணைவழு வமைத்தவாறு.

(56)

1. அழிதூ முதலியவை.