1.கிளவியாக்கம்

புறனடை

பாலுக்குப் புறனடை

57காலம் உலகம் உயிரே உடம்பே
பால்வரை தெய்வம் வினையே பூதம்
ஞாயிறு திங்கள் சொல்என வரூஉம்
ஆயீ ரைந்தொடு பிறவும் அன்ன
ஆவயின் வரூஉங் கிளவி யெல்லாம்
பால்பிரிந் திசையா உயர்திணை மேன.
 

காலமுதலாகச் சொல்லப்பட்ட பத்தும் அத்தன்மைய பிறவுமாகிய அப் பகுதிக்கண் வருஞ் சொல்லெல்லாம், உயர்திணைச் சொல்லாயினும், உயர்திணைக்கண் பால்பிரிந்திசையா, அஃறிணைப்பாலா யிசைக்கும் ; எ-று.

எ - டு: இவற்குக் காலமாயிற்று, உலகம் பசித்தது, உயிர்போயிற்று உடம்பு நுணுகிற்று, தெய்வஞ் செய்தது, வினை விளைந்தது, பூதம் புடைத்தது, ஞாயிறு பட்டது, திங்களெழுந்தது, சொன் னன்று என வரும்.

பிறவும் என்றதனால், பொழுது நன்று யாக்கை தீது விதிவலிது, கனலி கடுகிற்று , மதி நிறைந்தது, வெள்ளி யெழுந்தது, வியாழ நன்று என்பன போல்வன கொள்க.

கால மென்பது காலக் கடவுளை உலக மென்றது ஈண்டு மக்கட்டொகுதியை.

உயிரே யுடம்பே யெனப் பொதுவகையாற் கூறினா ரேனும், மக்களுயிரு முடம்புமே கொள்ளப்படும். என்னை? உயர்திணை முடிவு கொள்ளா என விலக்கப்படுவன அவையே யாகலி னென்பது. `அஃறிணை யென்மனாரவரல பிறவே' என்புழி அஃறிணையா யடங்கி உயர்திணை முடிபெய்தாமையின். அவையும் விலக்கற்பாட்டிற் கேலாவெனின் : - அற்றன்று ; மக்கட்சுட்டுடைமையான அவை உயர்திணையேயா மென்பது யாதோ மக்கட்சூட்டுடையவாறெனின் : - அறஞ்செய்து துறக்கம் புக்கான் எனவும் , உயிர் நீத்தொருமகன் கிடந்தான் எனவும் , உயிருமுடம்பும் அவரின் வேறன்றி அவராக வுணரப்பட்டு உயர்திணைக் கேற்ற முடிபுகொண்டு நிற்றலின் மக்கட் சுட்டுடைய வென்பது. ஓராவை எம்மன்னை வந்தாளென்றும் ஓரெருத்தை எந்தை வந்தானென்றும் உயர்திணை வாய்பாட்டாற் கூறியவாறுபோல, உயிருமுடம்பும் அவ்வாறு கூறப்பட்டன வென்று கொள்ளாமோ வெனின் : - கொள்ளாம் ; அவற்றான் வரும் பயனோக்கிக் காதலால் எம்மன்னை எந்தை யென்றான் ஆண்டு ; ஈண்டுக் காதல் முதலாயின இன்மையின் மக்கட்சுட்டுடைய வென்பது.

பால்வரை தெய்வமென்பது எல்லார்க்கு மின்ப துன்பத்திற்குக் காரணமாகிய இருவினையையும் வகுப்பது. வினையென்பது அறத் தெய்வம். சொல்லென்பது நாமகளாகிய தெய்வம்.

அஃதேல், குடிமை யாண்மை யென்பனவற்றோடு இவற்றிடை வேற்றுமை யென்னையெனின் : - அவை இருதிணைப் பொருட்கண்ணுஞ் சேறன் மாலைய ; இவை அன்ன வல்லவென்பது.

உலகமென்பது இடத்தையும் ஆகுபெயரான் இடத்து நிகழ் பொருளாகிய மக்கட்டொகுதியையும் உணர்த்துமாகலான், இருதிணைக்கண்ணும் சென்றதன்றோவெனின் : -அற்றன்று ; வடநூலுள் உலகமென்பது இருபொருட்கு முரித்தாக ஓதப்பட்டமையின் , மக்கட்டொகுதியை யுணர்த்தும் வழியும் உரிய பெயரே யாகலின் ஆகுபெயரன்று ;அதனால் ஒருசொல் இருபொருட்கண்ணுஞ் சென்றதெனப்படாது இரு பொருட்கு முரிமையான் இரண்டு சொல்லெனவே படுமென்பது. வேறு பொருளுணர்த்தலின் வேறு சொல்லாதலே துணிவாயினும், பலபொருளொரு சொலென்புழி எழுத்தொப்புமை பற்றி ஒரு சொல்லென்றார்1.

மேலென்பது ஏழாம் வேற்றமைப் பொருளுணர்த்துவ தோரிடைச் சொல்லாகலின், ஈறு திரிந்து மேனவென நின்றது.

இதுவும் திணைவழுவமைதி.

(57)

1. ஒருசொல் ஒரு பொருளே தரும். ஒரே சொல் பல பொருள் தருமாயின் பொருள்தொறும் வேறு சொல்லாம். ஆயினும் எழுத்தொப்புமை பற்றித் தொல்காப்பியர் பல பொருளொரு சொல் என்றார் என்பது .