தம் வினைக் கியலு மெழுத்தான் முடிதலும் தம் முதல் வினைக் கியலு மெழுத்தான் முடிதலு மெனச் சினை நிலைக் கிளவி இரு முடிபுடையவற்றுள் , முதல் வினைக் கியலு மெழுத்தான் முடிவுழி யென்பார், தம் வினைக்கியலு மெழுத்தலங்கடை யென்றார். கண்முதலாயவும் பிறவும் பன்மைகுறித்து நின்ற சினைநிலைக்கிளவி ; அவை தம் வினைக்கியலு மெழுத்தான் முடியாது தம் முதல் வினைக்கியலு மெழுத்தான் முடியும்வழிப் பன்மையாற் சொல்லப்படும் யாப்புறவுடையவல்ல ; முதலொன்றாயின் ஒருமையானும், பலவாயிற் பன்மையானுங் கூறப்படும்; எ-று . எ - டு: கண்ணல்லள், தோணல்லள், முலைநல்லள், எனவும்; கண்ணல்லர், தோணல்லர், முலைநல்லர் எனவும் வரும். பிறவு மென்றதனால் புருவங் காதென்னுந் தொடக்கத் தனவுங் கொள்க. `பன்மைகூறுங் கடப்பாடிலவே' யென்றதனால் பால் வழுவும், `தம் வினைக்கியலு மெழுத்தலங்கடை' யென்றதனால் திணைவழுவுமமைத்தார். பன்மை கொண்டன பன்மையொருமை மயக்கமில்லாத் திணைவழுவாகலின், தம்வினைக்கியலு மெழுத்தலங்கடை யென்பதனான் அமைக்கப்படும். மூக்கு நல்லள், கொப்பூழ் நல்லள் என ஒருமைச் சினைப் பெயர் நின்று உயர்திணை கொண்டனவும் நிறங்கரியள் கவவுக்கடியள் எனப் பண்புந் தொழிலும் நின்று உயர்திணை கொண்டனவும் தன்னின முடித்தல் என்பதனானமைக்கப்படும். கோடு கூரிது களிறு, குளம்பு கூரிது குதிரை என அஃறிணைப் பன்மைச் சினைப்பெயர் நின்று முதல்வினையாகிய ஒருமையான் முடிந்தனவும் அமையுமா றென்னையெனின் : - ஆண்டுப் பன்மையொருமை மயக்கமல்லது திணை வழுவின்மையின் ஈண்டைக்கெய்தா ; அப் பன்மையொருமை மயக்கம் ஒன்றென முடித்தல் என்பதனானமைக்கப்படும் , அஃதேல் இச்சூத்திரத்தால் திணைவழுவோடு கூடிய பால்வழு அமைக்கப்பட்டதென்பது ஏற்றாற்பெறுதுமெனின் : - சினைக்கிளவிக்குத் தம் வினைக்கியலு மெழுத்தாவது அஃறிணை வினைக்குரிய எழுத்தாம் : அஃதல்லாதது உயர்திணைவினைக்குரிய எழுத்தேயாம். என்னை ? அஃறிணைக்கு மறுதலை உயர்திணையேயாகலான். அதனால் திணைவழுவுதலும் பெறுதுமென்பது. அஃதேல், தம் வினைக்கியலு பெழுத்தாவன. சினைவினைக்குரிய எழுத்தென்றும், அவையல்லாதனவாவன முதல் வினைக்குரிய எழுத்தென்ற முரைக்க ; உரைக்கவே, உயர்திணைச்சினையும் அஃறிணைச் சினையுமெல்லாம் அடங்குமெனின் : - அற்றன்று ; அஃறிணைக் கண் சினைவினைக்குரிய எழுத்தோடு முதல்வினைக்குரிய எழுத்திற்கு வேறுபாடின்றி எல்லாம் அஃறிணையெழுத்தேயாகலின் தம்வினைக்கியலு மெழுத்தலங்கடை யென்பதற் கேலாதாகலால், கண் முதலாயின உயர்திணைச்சினையேயா மென்பது. (61) கிளவியாக்கம் முற்றிற்று |