2.வேற்றுமையியல்

முதல் வேற்றுமை

எழுவாய் ஏற்கும் பயனிலைகள்

66பொருண்மை சுட்டல் வியங்கொள வருதல்
வினைநிலை யுரைத்தல் வினாவிற் கேற்றல்
பண்புகொள வருதல் பெயர்கொள வருதலென்று
அன்றி யனைத்தும் பெயர்ப்பய னிலையே.
 

பொருண்மை சுட்டல் - ஆ வுண்டு என்பது. வியங்கொள வருதல் - ஆ செல்க என்பது , வினைநிலை யுரைத்தல் - ஆ கிடந்தது என்பது . வினாவிற் கேற்றல் - அஃதியாது அஃதெவன் என வினாச் சொல்லொடு தொடர்தல் , பண்புகொள வருதல் - ஆ கரிது என்பது ; தன்னின முடித்த லென்பதனால் , ஆ வில்லை , ஆ வல்ல என்னுந் தொடக்கத்துக் குணப்பொருள் வல்லா வினைக் குறிப்போடு தொடர்தலுங் கொள்க. பெயர் கொள வருதல் - ஆ பல என்பது , அன்றி யனைத்தும் பெயர்ப் பயனிலையே யென்பது அவ்வாறும் பெயர்வேற்றுமைப் பயனிலையாம் ; எ - று.

முடிக்குஞ் சொற்பொருள் அத் தொடர்மொழிக்குப் பயனாகலின் பயனிலை என்றார்.

உண்டென்பது பண்பு முதலாயின சுட்டாது உண்மையே சுட்டலின் வேறு கூறினார் , பொய்ப்பொருளின் மெய்ப் பொருட்கு வேற்றுமை யுண்மையாகலின் , அவ் வுண்மையைப் பொருண்மையென்றார்.

வியங்கொள வருதல் வினைநிலை யுரைத்தற்கண்ணும் , வினாவிற்கேற்றல் பெயர்கொள வருதற்கண்ணும் , வினைக்குறிப்பாயவழிப் பண்புகொள வருதற்கண்ணும் அடங்குமாயினும் வினையும் பெயரும் பண்பும் முடிக்குஞ் சொல்லா தலேயன்றி முடிக்கப்படுஞ் சொல்லாதலேயன்றி முடிக்கப்படுஞ் சொல்லாதலு முடைய வியங்கோளும் வினாவும் முடிக்குஞ் சொல்லாயல்லது நில்லாமையின் , அவ் வேறுபா டறிவித்தற்கு வேறு கூறினாரென்பது.

`பெயர்தோன்று நிலை' (சொல் - 6) என்றதனானும் , அன்றியனைத்தும் பெயர்ப் பயனிலையே யென்பதனானும் , பெயர் தோன்றிய துணையாய் நின்று பயனிலைத்தாதல் எழுவாய் வேற்றுமைய திலக்கணமென்பது பெற்றாம்.

ஆபல என்புழிப் பலவென்பதற்கும் பயனிலை யாதெனின் அது பயனிடையாய் ஆவென்பதனை முடித்தற்கு வந்ததாகலின் , தான் பிறிதோர் சொன்னோக்காது ஆவென்பதனோடு தொடர்ந்து அதனை முடித்தமைந்து மாறுமென்பது . அஃதேல் , பயனிலை கொள்ளாதது எழுவாய் வேற்றுமையாமா றென்னையெனின் ;- உருபோறல் பெயர்க்கிலக்கணமாயினும் உருபேலாதவழியும் பெயராமறு போல , எழுவாய் வேற்றுமை பயனிலை கொள்ளாதவழியும் எழுவாய் வேற்றுமையே யாமென்பது. இலக்கிய மெங்குஞ் செல்லாதன இலக்கணமாமா றென்னையெனின் - ஆண்டிலக்கணமாவன உருபேற்றற்கேற்ற1 தன்மையும் பயனிலையும் பயனிலை கோடற்கேற்ற தன்மையுமாகலின் , அத்தன்மை எல்லாவற்றிற்கு முண்மையின் இலக்கணமா மென்பது.

அகரச்சுட்டு அன்றி யென ஈறு திரிந்து நின்றது , அன்றியனைத்தும் பெயர்ப்பயனிலை யெனவே பயனிலைகோடல் பெயர்க்கிலக்கணமென்பதூஉம் பெற்றாம்.

(5)

1. உருபேற்றலும் என்றிருப்பது நன்று"