2.வேற்றுமையியல்

முதல் வேற்றுமை

எழுவாயும், தோன்றா எழுவாயும்

68எவ்வயிற் பெயரும் வெளிப்படத் தோன்றி
அவ்வியல் நிலையல் செவ்வி தென்ப.
 

மூன்றிடத்துப் பெயரும் செவிப்புலனாகத் தோன்றி நின்று பயனிலை கோடல் செவ்விதென்ப ஆசிரியர்; எ-று

எனவே , அவ்வாறு தோன்றாது நின்று பயனிலை கோடலுமுண்டு; அது செவ்விதன்று என்றவாறாம்.

பெயரென்றது ஈண்டெழுவாயை.

கருவூர்க்குச் செல்லாயோ சாத்தா என்றவழிச் செல்வல் எனவும் , யான் யாது செய்வல் என்றவழி இது செய் எனவும் , இவன் யார் என்ற வழிப் படைத்தலைவன் எனவும் செப்பிய வழி , யான் நீ இவன் என்னும் எழுவாய் வெளிப்படாது நின்று, செல்வல் , இது செய் , படைத்தலைவன் என்னும் பயனிலை கொண்டவாறு கண்டுகொள்க.

எவ்வயிற் பெயரும் என்றது என்னையெனின் ;- செல்வல் . இது செய் என்னுந் தன்மை முன்னிலை வினைகளான் யான் நீ யென்பனவற்றின் பொருளு முணரப்படுதலின் யான் செல்வல் நீ யிது செய்யெனப் பெயர் வெளிப்படுதல் பயமின்றாயினும் வழக்கு வலியுடைத்தாகலின் , அவ்வாறு வருதல் பயமின் றெனப்படா தென்பது விளக்கிய எவ்வயிற் பெயரு மென்றா ரென்பது.

அவ்வியலா னிலைய லென விரியும் .

பயனிலைக்கு இருநிலைமையு1 மோதாது எழுவாய்க்கே யோதுதலாற் பயனிலை வெளிப்பட்டே நிற்கும் .

எவ்வயிற் பெயரும் பயனிலை தோடல் செவ்விதென , உருபேற்றல் செவ்விதன்றா மென வுரைத்து அவ்வாய நீயிரென்பன உருபேலாவென்று காட்டினாரால் உரையாசிரியரெனின் ;- அவ்வாயென்பது இடைச் சொல்லாய் ஆண்டென்னும் பொருள்பட நின்றவழி உருபேயன்றிப் பயனிலையும் ஏலாதாம். இனி அல்வழிக்கண்2 நும்மென்பது திரிந்து நீயிரென நின்ற திரிபைப் பெயரெனக் கொண்டு உருபேலாதென்றாராயின் , 3நீதியென்பதன் திரிபாகிய நின் என்பதனையும் பெயராகக் கொண்டு பயனிலை கொள்ளாதென்றுங் கூறல்வேண்டும் ; அன்றி நும்மின் திரிபாகிய நீயரென்பதனை `எல்லா நீயிர் நீயெனக் கிளத்து' (சொல் - 174) என இயற்கைப் பெயரோடு ஒருங்கு வைத்தது நீயிரென்னுந் திரிபே இயல்பாக வேற்றுமைக்கண் நும்மெனத் திரியினுமமையுமென்னுங் கருத்தினராயன்றே. அதனால் இயல்பாகக் கொள்ளப்பட்ட நிலைமைக்கண் நீயிரென்பதனை உருபேலா தென்றாயின் நும்மெனத் திரிந்து4 உருபேற்பதனை உருபேலாதென்றல் பொருந்தாதாம் . அதனானது போலியுரை யென்க.

(7)

1. இருநிலை - வெளிப்பட்டு நிற்றலும் மறைந்து நிற்றலும் .

2.தொல். எழுத்து 326 ; தொல். சொல். 143.

3. தொல். எழுத்து 179.

4.நும் என்னும் பெயர் நீயிர் எனத் திரிந்தது என்பது முற்றிலும் வழுவாம் . நூம் என்ற வழக்கற்ற முன்னிலைப் பன்மைப் பெயரே நும் எனக் குறுகி வேற்றுமை யேற்கும் . நீயிர் என்பது நீ என்னும் முன்னிலை யொருமைப் பெயர் படர்க்கைக்குரிய `இர்' ஈற்றொடு கூடியது . ஆதலின் எழுவாய் வேற்றுமை மட்டும் பெறும்.