எழுவாய் வேற்றுமையுணர்த்தி ஏனையறுவகை வேற்றுமையிலக் கணமுமுணர்த்திய எடுத்துக் கொண்டார். பெயர் , ஐ , ஒடு , கு , இன் , அது , கண் என்று கூறப்பட்ட முறைமையையுடைய உருபு தந்நிலை திரியாது பெயர்க்கீறா மியல்பையுடையவென்று சொல்லுவர் ஆசிரியர்; எ-று. எ - டு:சாத்தனை , சாத்தனொடு, சாத்தற்கு , சாத்தனின் , சாத்தனது , சாத்தன்கண் எனவரும் . அம்முறைபற்றி அவை யெண்ணுப்பெயரான்1 வழங்கப் படுதலின் கூறிய முறையி னுருபு என்றார். வினைச்சொ லிறுதி நிற்குமிடைச்சொல் , தாமென வேறு உணரப்படாது அச் சொற்குறுப்பாய் நிற்குமன்றே , இவை யவ்வாறு பெயர்க் குறுப்பாகாது தாமென வேறுணரப் பட்டிறுதி நிற்குமென்பார் `நிலை திரியாது' என்றார். உருபு பெயர் சார்ந்து வருமெனவே , உருபேற்றலாகிய பெயரிலக் கணமும் பெறப்பட்டது. (8)
1.எண்ணுப்பெயரான் வழங்கப்படுதலாவது முதலாம் வேற்றுமை 2 - ஆம் வேற்றுமை என வழங்கல். |