ரஃகானாகிய ஒற்றும் பகரமாகிய இறுதியும் மார் என்னும் இடைச்சொல்லும் இம்மூன்றும் பலரறி சொல்லாம், ஏ என்பது ஈற்றசை ; எ-று. எ - டு: உண்டனர், உண்டார், உண்ணாநின்றனர், உண்ணாநின்றார், உண்பர், உண்பார், கரியர், கரியார் எனவும் ; கூறுப, வருப எனவும்: கொண்மார் சென்மார் எனவும் வரும். மார் எதிர்காலம் பற்றி வந்த ஆரேயாம் ; ரஃகான் ஒற்றென அடங்குமெனின்; அற்றன்று, ஆரேயாயின் கொண்மார் என்புழி மகரம் காலம் பற்றி வந்ததோர் எழுத்தாகல் வேண்டும்; உண்பார் வருவார் எனக்காலம் பற்றி வரும் எழுத்து முதனிலைக் கேற்றவாற்றான் வேறுபட்டு வருமன்றே. அவ்வாறன்றி உண்மார் வருமார் என எல்லா முதனிலை மேலும் மகரத்தோடு கூடி வருதலானும ;: வினைகொண்டு முடிதற்கேற்பதோர் பொருள் வேறுபாடுடையானும் ஆர் ஈறு அன்று வேறெனவே படும் என்பது. மூன்று காலமும் வினைக்குறிப்பும் பற்றி வருதல் ஒப்புமை நோக்கி அர் ஆர் என்னும் இரண்டு ஈற்றையும் ` ரஃகான் ' என அடக்கி ஓதினார் . அன் ஆன் அள் ஆள் என்பனவற்றையும் இவ் வொப்புமை பற்றி ` னஃகான் ளஃகான் ' என அடக்கி ஓதினார். ரகாரம் மூன்று காலமும் வினைக்குறிப்பும் பற்றிப் பெருவழக்கிற்றாய் வருதலின், முன் வைத்தார். மார் பகரவிறுதியிற் சிறு வழக்கிற்றாகலின், பின் வைத்தார். உண்கும், உண்டும், வருதும் , சேறும் என்னுந் தொடக்கத் தனவும் பலரறி சொல்லாயினும் , அவை ` எண்ணியல் மருங்கில் திரி' (சொல் - 209.) தலின் நேரத் தோன்றாவாகலான். ` இவற்றை நேரத் தோன்றும் பலரறி சொல்' என்றார்1. மூன்றும் பலரறி சொல் என்றாராயினும் , பலரறி சொல்லாவது இம் மூன்றும் என்பது கருத்தாகக் கொள்க. (7)
1. கும் டும் தும் றும் என்னும் ஈற்றுத் தன்மைப் பன்மை வினைமுற்றுக்களும் பலர் பாற் சொற்களேனும், அர் ஆர் ப மார் என்னும் ஈற்று முற்றுக்களைப்போல் உயர்திணைக்கே யுரியவாகாது, 'யானுமென்னெஃகமுஞ் சாரும்' என்றாற் போல் திணைவிரவி எண்ணுமிடத்து அஃறிணையையும் உளப்படுத்துதலின், அவற்றை நேரத்தோன்றா என விலக்கினர் என்க. |