2.வேற்றுமையியல்

முதல் வேற்றுமை

பெயரின் இயல்பு

70பெயர்நிலைக் கிளவி காலந் தோன்றா
தொழில் நிலை யொட்டும் ஒன்றலங் கடையே.
 

பெயர்சொற் காலந் தோன்றா , 1வினைச் சொல்லோடொக்கும் ஒரு கூறல்லாத விடத்து; எ- று .

சாத்தன் , கொற்றன் , உண்டல் , தின்றல் எனக் காலந் தோன்றாது நிற்றலும் , உண்டான் , தின்றான் எனத் தொழினிலை யொட்டுவன காலந்தோன்றி நிற்றலுங் கண்டு கொள்க.

உண்டான் , தின்றான் என்னுந் தொடக்கத்துப்படுத்துச் சொல்லப்படும் தொழிற்பெயர்2 வினைச்சொற்போலத் திணையும் பாலுங் காலமும் முதலாயினவற்றை விளக்கி , அன் ஆன் முதலாகிய ஈற்றவாய் வருதலின் , `தொழில்நிலை யொட்டும்' என்றார் . ஒட்டுமென்பது உவமச் சொல்.

பெயராகிய நிலையை யுடையது பெயர்நிலை யென அன்மொழித் தொகை. பெயர் - பொருள் , தொழில்நிலையு மது.3

காலந் தோன்றா என்பன ஒரு சொல்லாய்ப் பெயர் நிலைக் கிளவி யென்பதற்கு முடிபாயின.

பயனிலை கோடலும் உருபேற்றலுமாகிய பெயரிலக்கணம் ஈண்டுப் பெறப்படுதலின் , அவற்றோடியையக் காலந் தோன்றாமையாகிய பெயரிலக்கணமும் ஈண்டே கூறினார் . பெரும்பான்மை பற்றிக் காலந்தோன்றாமை4 பெயரிலக்கணமாயிற்று.

(9)

1.தொழில்நிலை யொட்டும் ஒன்று - வினையாலணையும் பெயர்.

2. தொழிற் பெயர் - வினையாலணையும் பெயர்.

3. அது - அன்மொழித் தொகை ( தொழினிலை - தொழிலாகிய நிலையையுடையது.)

4. காலங்காட்டும் வினையாலணையும் பெயர் சிறுபான்மை.