2.வேற்றுமையியல்

இரண்டாம் வேற்றுமை

அப்பொருளின் பாகுபாடுகள்

72காப்பின் ஒப்பின் ஊர்தியின் இழையின்
ஒப்பின் புகழின் பழியின் என்றா
பெறலின் இழவின் காதலின் வெகுளியின்
செறலின் உவத்தலின் கற்பின் என்றா
அறுத்தலின் குறைத்தலின் தொகுத்தலின் பிரித்தலின்
நிறுத்தலின் அளவின் எண்ணின் என்றா
ஆக்கலின் சார்தலின் செலவின் கன்றலின்
நோக்கலின் அஞ்சலின் சிதைப்பின் என்றா
அன்ன பிறவும் இம்முதற் பொருள
என்ன கிளவியும் அதன்பால என்மனார்.
 

செயப்படு பொருள் மூன்றனையும்1 பற்றி வரும் வாய்பாடுகளை விரிக்கின்றார்.

காப்பு முதலாகச் சிதைப்பு ஈறாகச் சொல்லப்பட்ட இருபத்தெட்டுப் பொருளும் அவை போல்வன பிறவுமாகிய அம் முதற்பொருள்மேல் வரும் எல்லாச் சொல்லும் இரண்டாம் வேற்றுமைப் பால என்று சொல்லுவர் புலவர்;எ-று.

என்றாவென்பது எண்ணிடைச்சொல்.

இன்னெல்லாம் புணரியனிலையிடைப் பொருணிலைக்குதவாது2 (சொல்-250) எண்ணின்கண் வந்தன. முன்னர் வருவனவற்றிற்கும் ஈதொக்கும்,

`அம்முதல்' என்றது கூறப்பட்ட செயப்படுபொருள் என்றவாறு.

எ - டு: எயிலை யிழைத்தான் என்பது இயற்றப்படுவது. கிளியை யோப்பும், பொருளை யிழக்கும், நாணை யறுக்கும்,மரத்தைக் குறைக்கும், நெல்லைத் தொகுக்கும் ,வேலியைப் பிரிக்கும் ,அறத்தை யாக்கும் ,நாட்டைச் சிதைக்கும் என்பன வேறுபடுக்கப்படுவன. குறைத்தல் சுருக்குதலும் சிறிதிழக்கச் சிதைத்தலுமாம்3.அறுத்தல் சிறிதிழவாமற் சினையையாயினும் முதலையாயினும் இருகூறு செய்தல்.ஊரைக் காக்கும், தந்தையை யொக்கும் ,தேரை யூரும், குச்சிலைப் புகழும்,நாட்டைப் பழிக்கும் ,புதல்வரைப் பெறும்,மனைவியைக் காதலிக்கும் பகைவரை வெகுளும், செற்றாரைச் செறும், நட்டாரை யுவக்கும் , நூலைக் கற்கும் , பொன்னை நிறுக்கும், அரிசியை யளக்கும் , அடைக்காயை யெண்ணும் ஊரைச் சாரும், நெறியைச் செல்லும், சூதினைக் கன்றும்,கணையை நோக்கும் , கள்வரை யஞ்சும் என்பன எய்தப்படுவன.வெகுளலுஞ் செறலும் கொலைப்பொருளவாயவழி வேறுபடுக்கப் படுவனவாம்.செறல் வெகுளியது காரியம்4.

இயற்றப்படுவது ஒருதன்மைத்தாகலின், அதற்கொரு வாய்பாடே கூறினார்.ஏனைய பல விலக்கணத்தவாகலின் பல வாய்பாட்டன் விரித்துக் கூறினார்.

அன்ன பிறவு மென்றதனால் ,பகைவரைப் பணித்தான், சோற்றை யட்டான் ,குழையை யுடையான் ,பொருளையிலன் என்னுந் தொடக்கத்தன கொள்க.

காப்பு முதலாயின பொருள் பற்றி யோதப்பட்டமையான், 5ஊரைப் புரக்கும் ,ஊரையளிக்கும் தந்தையை நிகர்க்கும், தந்தையை யொட்டும், தேரைச் செலுத்தும் ,தேரைக் கடாவும் என்பன போல்வன வெல்லாங் கொள்க.

இயற்றப்படுதல் முதலாகிய வேறுபாடு,குறிப்புவினைச் செயப்படு பொருட்கண் ஏற்பன கொள்க.

(11)

1.செயப்படுபொருள் மூன்று-முந்தின நூற்பாவுரையிற் கூறப்பட்ட, இயற்றப்படுவது முதலிய மூன்று.

2.புணரியல் நிலையிடைப் பொருணிலைக் குதவுதலாவது "எல்லாவற்றையும் என்புழி வற்றுச்சாரியை நிலைமொழிப்பொருள் அஃறிணைப் பொருளென்பதுபட வருதலும் ,எல்லாநம்மையும் என்புழி நம்முச் சாரியை அப்பொருள் தன்மைப் பன்மையென்பது பட வருதலும்"

3.சுருக்குதல்-குடை மடக்கலும் கருத்துரைத்தலும் போல ஒரு பொருள் முழுவதையும் சுருக்குதல், சிறிதிழக்கச் சிதைத்தல் - ஒரு பகுதியை மட்டும் நீக்குதல்.

4. வெகுளியது காரியம், கொல்லுதல்.

5.பொருள் பற்றி யோதப்பட்டமை- `கொன்னைச் சொல்லே' `எனவென் கிளவி' யெனச் சொற்பற்றிக் கூறாமல் `புரத்தலும் அளித்தலும் முதலிய காப்பும், நிகர்த்தலும் ஒட்டுதலும் முதலிய ஒப்பும்' எனப் பொருள்பற்றிக் கூறுதல்.