2.வேற்றுமையியல்

4.மூன்றாம் வேற்றுமை

`ஒடு' உருபின் பொருள்

73மூன்றா குவதே
ஒடுவெனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
வினைமுதல் கருவி அனைமுதற் றதுவே.
 

மேல் ஒடுவெனப் பெயர்கொடுத் தோதிய வேற்றுமைச் சொல் மூன்றாவதாம், அது வினைமுதலும் கருவியுமாகிய இரண்டு முதலையும் பொருளாக வுடைத்து; எ-று.

மேல் ஐயொடு குவ்வென்றோதியவழி ஆனுருபுந் தழுவப் பட்டமையான், ஈண்டும் அவ்வாறே கொள்ளப்படும்; படவே மூன்றாவதாதலும் வினைமுதல் கருவிப் பொருட்டாதலும் ஆனுருபிற்கு மெய்தும்.

வினைமுதலாவது கருவி முதலாயின காரணங்களைத்1தொழிற்படுத்துவது. கருவியாவது வினைமுதற் றொழிற் பயனைச் செயப்படு பொருட்கணுய்ப்பது

அனை யென்பது அத்தன்மையவாகிய முதலென அவற்றதிலக்கணத்திற்குத் தோற்றுவாய் செய்தவாறு.
முதலென்பதற்கு மேலே யுரைத்தாம்.

எ - டு: கொடியொடு துவக்குண்டான், ஊசியொடு குயின்ற தூசும் பட்டும் எனவும், அகத்தியனால் தமிழுரைக்கப்பட்டது, வேலானெறிந்தான் எனவும் வரும்.

பிறபொருளு முளவேனும் வினைமுதல் கருவி சிறந்தமையான் ' வினைமுதல் கருவி யனை முதற்று' என்றார்.

வினைமுதல் கருவிக்கண் ஒடுவெனுருபு இக்காலத் தருகி யல்லது வாராது.

(12)

1. கருவி முதலாயின காரணங்கள்:- முதற்காரணம் துணைக்காரணம் நிமித்தகாரணம் எனக் காரணம் மூன்று. இவை கருவி யென்றுங் கூறப்படும். நிமித்தகாரணத்தை எழுவாயென்று கொள்ளுவதைவிட நோக்கம் என்று கொள்வது பொருந்தும். எதன் நிமித்தம் என்பது எதன்பொருட்டு என்று பொருள்படுதலையும், கருவியைக் கொண்டு கருமஞ் செய்யும் தலைவன் கருவியிலும் வேறாயிருத்தலையும், ஒரு கருமத்தின் பயனை நோக்குவதும் அக் கருமஞ் செயப்படுவதற்குக் காரணமாயிருத்தலையும் நோக்குக. நோக்கம் பயனின் முன்னிலையும், பயன் நோக்கத்தின் பின்னிலையு மாகும். அடையப்படாத குறிக்கோள் நோக்கமும், அடையப் பட்ட பேறுபயனுமாகும். ஊதியம் வினைக்கு முன்பெறப்படுவதாயின் நோக்கமும் பயனும் நன்றேயாம். கருவியைக் காரகம் ஞாபகம் என்றும் இரண்டாய்ப்பகுப்பார். காரகம் ஒரு தொழிலைச் செய்ய உதவுவது; ஞாபகம் ஒரு பொருளை அறிய உதவுவது.