2.வேற்றுமையியல்

5.நான்காம் வேற்றுமை

`கு' உருபின் பொருள்

75நான்கா குவதே
குஎனப் பெயரிய வேற்றுமைக் கிளவி
எப்பொரு ளாயினுங் கொள்ளும் அதுவே.
 

மேல் கு எனப் பெயர்கொடுத்தோதப்பட்ட வேற்றுமைச்சொல் நான்காவதாம். அது யாதானுமொரு பொருளாயினும் அதனை யேற்று நிற்கும்; எ -று.

எ - டு: அந்தணற் காவைக் கொடுத்தான் எனவரும்.

மாணாக்கற்கு நூற்பொருளுரைத்தான் எனக் கொடைப் பொருளவாகிய சொல்லானன்றிப் பிற வாய்பாட்டாற் கூறப்படுவனவும் ; மாணாக்கற்கு அறிவு கொடுத்தானெனக் கொடுப்பான் பொருளாய்க் கொள்வான்கட் செல்லாது ஆண்டுத் தோன்றும் பொருளுமெல்லா மடங்குதற்கு `எப் பொருளாயினும் ' என்றார்.

பிறபொருளு முளவாயினும், கோடற்பொருள் சிறந்தமையின், எப்பொருளாயினுங் கொள்ளு மென்றார்.

(14)