அதற்கு வினையுடைமை - கரும்பிற்கு வேலி என்பது, வினை - ஈண்டுபகாரம். அதற்குடம்படுதல் - சாத்தற்கு மகளுடம்பட்டார் என்பது. சான்றோர் கொலைக்குடம்பட்டார் என்பதுமது. அதற்குப் படுபொருளாவது பொதுவாகிய பொருளைப் பகுக்குங்கால் ஒரு பங்கிற்படும் பொருள்; அது சாத்தற்குக் கூறு கொற்றன் என்பது. அதுவாகு கிளவி கடி சூத்திரத்திற்குப்1 பொன் என்பது. பொன்கடிசூத்திர மாய்த் திரியுமாகலின் அதுவாகு கிளவி யென்றார். கிளவி - பொருள். அதற்கு யாப்புடைமை-கைக்கு யாப்புடையது கடகம் என்பது. அதற்பொருட்டாதல் - கூழிற்குக் குற்றேவல் செய்யும் என்பது. நட்பு-அவற்கு நட்டான், அவற்குத் தமன் என்பன. பகை - அவற்குப் பகை, அவற்கு மாற்றான் என்பன. காதல் - நட்டார்க்குக் காதலன், புதல்வற் கன்புறும் என்பன. சிறப்பு - வடுகரசர்க்குச் சிறந்தால் சோழியவரசர், கற்பார்க்குச் சிறந்தது செவி என்பன. அப்பொருளென்றது அன்னபொருளை! இவ்வாடையு மந்நூலானியன்ற தென்றதுபோல. எனவே, அன்னபிறவு மென்றவாறாம். அப்பொருட்கிளவியுமென்றதனால், பிணிக்கு மருந்து, நட்டார்க்குத் தோற்கும் , அவற்குத் தக்காளிவள், உற்றார்க்குரியர் பொற்றொடி மகளிர் என்பன போல்வனவெல்லாங் கொள்க. (15)
1. கடிசூத்திரம் - அரைஞாண் . |