மேல் இன்னெனப் பெயர்கொடுத் தோதப்பட்ட வேற்றுமைச்சொல் ஐந்தாவதாம். அஃது இப்பொருளி னித்தன்மைத்து இப்பொருளென்னும் பொருண்மையை உணர்த்தும்; எ-று. ஐந்தாவது நான்கு பொருண்மையுடைத்து ; பொருவும் , எல்லையும் , நீக்கமும், ஏதுவுமென , அவற்றுட் பொருவு இரு வகைப்படும் ; உறழ் பொருவும் உவமப் பொருவுமென, ஏதுவும் இருவகைப்படும் ; ஞாபக ஏதுவும் காரக ஏதுவுமென `அவற்றுள்' ஞாபகவேதுப் பொருண்மை மேலே கூறப்பட்டது. காரக ஏதுப் பொருண்மை அச்ச மாக்க மென்பன வற்றாற் பெறப்படும் . நீக்கப் பொருண்மை தீர்தல் பற்றுவிடுதல் என்பனவற்றால் பெறப்படும் . ஏனை யிரண்டும் இதனினிற்றிது என்பதனாற் கொள்ளப்படும் . அவ்விரண்டனையும் அஃதிருமுறையானுணர்த்துமாகலான்1 எல்லைப்பொருள் - கருவூரின் கிழக்கு ; இதனினூங்கு என வரும் . கிழக்கு ஊங்கு என்பன, வினைக்குறிப் பல்லவேனும் இற்றென்னும் பொருள்பட நிற்றலின், இற்றென்றலேயாம் . பொரூஉப் பொருட் குதாரணம் முன்னர்ப் பெறப்படும். (16)
1. ஏனையிரண்டு - பொருவும் எல்லையும் . இவை `இதனின் இற்று இது' என்பதனாற் கொளப்படுதலாவது : இப் பொருளின் இப்பொருள் இத்தகையது (உவமப் பொருவு) அல்லது , இப் பொருளினும் இப்பொருள் இத்தகையது (உறழ் பொருவு ) என்னும் வாய்பாட்டால் பொருவுப்பொருளும். இவ்விடத்தின் இவ்விடம் இத்திசையது என்னும் வாய்பாட்டால் எல்லைப்பொருளுங் கூறப்படுதல். |