2.வேற்றுமையியல்

ஐந்தாம் வேற்றுமை

அப் பொருளின் பாகுபாடுகள்

78வண்ணம் வடிவே யளவே சுவையே
தண்மை வெம்மை அச்சம் என்றா
நன்மை தீமை சிறுமை பெருமை
வன்மை மென்மை கடுமை யென்றா
முதுமை யிளமை சிறத்த லிழித்தல்
புதுமை பழமை ஆக்க மென்றா
இன்மை யுடைமை நாற்றந் தீர்தல்
பன்மை சின்மை பற்று விடுதலென்று
அன்ன பிறவும் அதன்பால என்மனார்.
 

வண்ண முதலாகப் பற்றுவிடுதலீறாகச் சொல்லப்பட்டனவும் அவைபோல்வன பிறவும் ஐந்தாம் வேற்றுமைத் திறத்தனவாம் ; எ-று.

வண்ணம் - வெண்மை கருமை முதலாயின , வடிவு - வட்டஞ் சதுர முதலாயின . அளவு - நெடுமை குறுமை முதலாயின . சுவை - கைப்புப் புளிப்பு முதலாயின. நாற்றம் - நறுநாற்றந் தீநாற்ற முதலாயின.

எ - டு: காக்கையிற்கரிது களம்பழம் , இதனின் வட்டமிது இதனி னெடிதிது , இதனிற் றீவிதிது1 இதனிற் றண்ணிதிது இதனின் வெய்திது, இதனி னன்றிது, இதனிற் றீதிது இதனிற் சிறிதிது, இதனிற் பெரிதிது, இதனின் வலிதிது, இதனின் மெலிதிது, இதனிற் கடிதிது, இதனின் முதிதிது, இதனி னிளைதிது, இதனிற் சிறந்ததிது, இதனி னிழிந்ததிது, இதனிற் புதிதிது, இதனிற் பழைதிது, இவனி னிலனிவன், இவனி னுடையனிவன், இதனி னாறுமிது, இதனிற் பல விவை , இதனிற் சில விவை எனவும் ; அச்சம் கள்ளரி னஞ்சும் எனவும் , ஆக்கம் - வாணிகத்தினாயினான் எனவும் , தீர்தல் -ஊரிற் றீர்ந்தான் எனவும், பற்றுவிடுதல் - காமத்திற் பற்று விட்டான் எனவும் வரும்.

அச்சமுதலிய நான்கு2 மொழித்து ஒழிந்த இருபத்து நான்கும் ஒத்த பண்பு வேறுபாடுபற்றிப் பொருஉப் பொருள் விரித்தவாறு.

அன்னபிறவு மென்றதனால், அவனி னனியளிவன், அதனிற் சேய்த்திது, இகழ்ச்சியிற் கெட்டான் , மகிழ்ச்சியின் மைந்துற்றான் என்பன போல்வன கொள்க.

பல வாய்பாட்டோடு வழக்கின்கட் பயின்று வருதலுடை மையாற் பொரூஉப் பொருள் இதற்குச் சிறப்புடைத்தாகலின், பெரும்பான்மையும் அதனையே விரித்தார்.

(17)

1.தீவிது - தித்திப்பு.

2. அச்சம் முதலிய நான்கு - அச்சம் ஆக்கம் தீர்தல் பற்றுவிடுதல் என்பன. இவற்றுள் முன்னிரண்டும் ஏது ; பின்னிரண்டும் நீக்கம்.