அதுவெனப் பெயர்கொடுத் தோதப்பட்ட வேற்றுமைச்சொல் ஆறாவதாம் அது உடையதாய் நிற்குந் தன்னானும் பிறிதொன்றானும் இதனதிதுவென்பதுபட நிற்குங் கிளவியிற் றோன்றுங் கிழமையைப் பொருளாக வுடைத்து ; எ-று . எனவே, ஆறாவது கிழமைப் பொருட்டென்றும் , அக்கிழமை தன்னான் வந்த தற்கிழமையும் பிறிதான் வந்த பிறிதின் கிழமையுமென இரண்டென்றுங் கூறியவாறாம். தன்னென்றது தன்னோடொற்றுமையுடைய பொருளை, பிறிதென்றது தன்னின் வேறாகிய பொருளை. அஃதேல், தன்னினும் பிறிதினுமாகிய கிழமைத்தென்னாது இதனதிது வெனு மன்ன கிளவிக் கிழமைத்தென்ற தென்னையெனின் : - பொருட்கிழமையும் , பண்புக்கிழமையும் , தொழிற்கிழமையும் அவை போல்வனவுமெனக் கிழமை தாம் பல , அவற்றுளொன்று சுட்டாது இதனதிதுவென்னுஞ் சொல்லாற் றோன்றும் கிழமைமாத்திரம் சுட்டுமென்றற்கு `இதனதிது வெனுமன்ன கிளவிக் கிழமைத்து' என்றார். இதனவிவையென்னும் பன்மை யுருபுத் தொடரு மடங்குதற்கு அன்ன கிளவியென்றார். ஒன்று பல குழீஇய தற்கிழமையும் , வேறு பல குழீஇய தற்கிழமையும் `ஒன்றியற் கிழமையும் உறுப்பின் கிழமையும்' மெய்திரிந்தாய தற்கிழமையுமெனத் தற்கிழமை ஐந்து வகைப்படும்1. பொருளின் கிழமையும், நிலத்தின் கிழமையும், காலத்தின் கிழமையுமெனப் பிறிதின்கிழமை மூவகைப்படும். அவற்றிற்கு உதாரணம் முன்னர்க் காட்டுதும். (18)
1. நன்னூலார் ஒன்றுபல குழீஇய தற்கிழமையை ஒன்றன் கூட்டம் என்றும், வேறு பல குழீஇய தற்கிழமையைப் பலவின் ஈட்டம் என்றும் ஒன்றியற் கிழமையைப்பண்பு என்றும், மெய்திரிந்தாய தற்கிழமையைத் திரிபினாக்கம் என்றும் கூறுவர். நச்சினார்க்கினியர் இங்குக் கூறிய ஐந்து தற்கிழமையுள் அடங்காதன, கபிலரது அகவல் என்னும் செய்யுட்கிழமையும், எனது உயிர் என்னும் ஒன்றிய தற்கிழமையுமாகும். |