2.வேற்றுமையியல்

9.வேற்றுமையின் தொகைவிரி இயல்பு

83வேற்றுமைப்1பொருளை விரிக்குங்காலை
ஈற்று நின் றியலுந் தொகைவயின் பிரிந்து
பல்லா றாகப் பொருள்புணர்ந் திசைக்கும்
எல்லாச் சொல்லும் உரிய வென்ப2.
 

வேற்றுமைத் தொகையை விரிக்குமிடத்து, வேற்றுமையேயன்றி, அன்மொழித் தொகையை விரிப்புழிப் பல்லாற்றான் அன்மொழிப் பொருளோடு புணர்ந்து வரும் எல்லாச் சொல்லும், விரிக்கப்படும் ; எ-று.

உருபுதொகப் பொருள் நிற்றலின், வேற்றுமைத் தொகையை வேற்றுமைப் பொருளென்றார். தொகையை வேற்றுமைப் பொருளென்றும், பொருளென்றும் யாண்டு மாள்ப.

அன்மொழித் தொகை பண்புத்தொகை முதலாகிய தொகை இறுதி நின்றியறலின், ஈற்று நின்றியலுந்தொகை யென்றார்.

தாழ்குழல், பொற்றொடி, மட்காரணம் என்னும் அன்மொழித் தொகைகளை விரிப்புழி, தாழ்குழலையுடையாள், பொற்றொடியை யணிந்தாள், மண்ணாகிய காரணத்தானியன்றது என வரும் உடைமையும், அணிதலும், இயறலும், கருங்குழற் பேதை, பொற்றொடியரிவை, மட்குடம் என்னும் வேற்றுமைத் தொகைகளை விரிப்புழியும் கருங் குழலையுடைய பேதை , பொற்றொடியை யணிந்த அரிவை, மண்ணா னியன்றகுடம் என வந்தவாறு கண்டுகொள்க.

பொருள் புணர்ந்திசைக்கு மெனவே, இருதொகைக் கண்ணும், ஒருவாய்பாட்டா னன்றிப் பொருள் சிதையாமலுணர்த்துதற் கேற்ற வாய்பாடெல்லாவற்றானும் வருமென்பதாம். அவ்வாறாதல் மேற்காட்டப் பட்டனவற்றுள் கண்டுகொள்க.

அன்மொழித் தொகையிற் சொற்பெய்து விரித்தல் யாண்டுப் பெற்றாமெனின்:- அதுவும் அநுவாதமுகத்தான் ஈண்டே பெற்றாமென்க. பெறவே இரண்டு தொகையும் விரிப்புழி வரும் வேறுபாடு கூறியவாறாம்.

இதனை `வேற்றுமைத் தொகையே யுவமைத் தொகையே' (சொல்-412) என்னுஞ் சூத்திரத்தின் பின் வைக்கவெனின்:- அதுவு முறையாயினும் இனிவருஞ் சூத்திரங்களான் வேற்றுமைத் தொகை விரிபற்றிய மயக்க முணர்த்துவான், ஆண்டுப் படுமுறைமை யுணர்த்துதல் ஈண்டு மியைபுடைத் தென்க.

உரையாசிரியர் இரண்டு சூத்திரமாக அறுத்து ஆசிரியர் மத விகற்பங்கூறித் தம்மத மிது வென்பது போதர ஒன்றாக வுரைப்பாரு முளரென்றார். இரண்டாய் ஒன்றாய வழிப் பிறிதுரையின்மையின், உரையாசிரியர் கருத்து இதுவேயாம்.

(22)

வேற்றுமையியல் முற்றிற்று