சினைமேல் நிற்குஞ் சொல்லிற்கு இரண்டாவதும் ஏழாவதும் வினைநிலைக்கண் ஒக்குமென்று சொல்லுவர் புலவர் ; எ-று எ - டு: கோட்டைக்குறைத்தான், கோட்டின்கட் குறைத்தான் என வரும். வினைக்குறிப்பை நீக்குதற்கு வினையென்றார். வினைநிலையொக்கு மென்றாரேனும் புகழ்தல் பழித்த லென்னுந் தொடக்கத்தன வொழித்து மயங்குதற்கேற்கும் அறுத்தல் குறைத்தன் முதலாயின வினையே கொள்ளப்படும். இரண்டாவதன் பொருட்கண் ஏழாவது சென்றதாயினும் சிறுவரவிற் றன்றி இரண்டாவதுபோல ஏழாவது வழக்கின்கட் பயின்று வருதலின்,ஒக்குமென்றார்; அது காரணத்தால்,கருமமல்லாச் சார்ச்சிக்கும் சினைக்கிளவிக்கும் ஏழாவது உரிமையுடைத்தென உடன் கூறாது வேறு கூறினாரென்பது. (2) |