கன்றல்பொருண்மேல் வருஞ் சொல்லும் செலவு பொருண்மேல் வருஞ் சொல்லும் இரண்டாவதற்கும் ஏழாவதற்கும் ஒரு தொழில்; எ-று. எ - டு:சூதினைக்கன்றினான், சூதின்கட்கன்றினான்; நெறியைச் சென்றான், நெறிக்கட்சென்றான் என வரும். பொருள்பற்றி யோதினமையால், சூதினையிவறினான்,சூதின்கணிவறினான்: நெறியை நடந்தான், நெறிக்கணடந்தான் என வருவனவுங் கொள்க. இரண்டாவதற்கு இப்பொருள் மேலே கூறப்பட்டமையால், கன்றல் செலவென்னும் பொருட்கு ஏழாவது முரித்தென்றோத அமையுமெனில் , அங்ஙனமோதின் ஏழாவதன் வரவு சிறுபான்மையென்பது படும்; ஆகலின் உடனோதினாரென்பது. (3) சினைநிலைக்கிளவி நிலைமொழிவரையறையாகலானும் , இது வருமொழிவரையறையாகலானும் , வேறு கூறினாரென்பது. |