3.வேற்றுமை மயங்கியல்

வேற்றுமையுருபுகள் மயங்குதல்

முதற்பெயர் சினைப்பெயர்களில்

87முதற்சினைக் கிளவிக்கு அதுவென் வேற்றுமை
முதற்கண் வரினே சினைக்கை வருமே.
 

முதற் சொல்லோடு தொடர்ந்த சினைச் சொல்லிற்கு ஆறாம் வேற்றுமை முதற்கண் வருமாயின், சினைச் சொல்லின்கண் இரண்டாம் வேற்றுமையே வரும்; எ-று.

எ - டு: யானையது கோட்டைக் குறைத்தான் என வரும்.

`சினைநிலைக் கிளவிக் கையுங் கண்ணும்' (சொல்- 85) என்றதனான் முதற்சினைக் கிளவிக்கும் இரண்டு வேற்றுமையு மெய்துவதனை நியமித்தவாறு.1 இது வருஞ் சூத்திரத்திற்கு மொக்கும்.

(4)

1. இங்கு ஐ தான் வருமென்பது. (இரண்டு வேற்றுமைகள் வர இருக்க ஒன்றனை நியமித்தல்.)